< Back
மாநில செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில்  வி.சி. சந்திரகுமார் போட்டி
மாநில செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி

தினத்தந்தி
|
11 Jan 2025 7:26 AM IST

அடுத்த மாதம் 5ம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறும்

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு 17ம் தேதி கடைசி நாளாகும்.அதேவேளை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா? அல்லது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடுமா? என்பது குறித்து குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது.இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வி.சி.சந்திரகுமார் தற்போது திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவியில் உள்ளார்.

இவர், இந்த தொகுதியில் 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் போட்டியிட்ட அவருக்கு அ.தி.மு.க.வும் ஆதரவு தெரிவித்து இருந்தது. அந்த தேர்தலில் வி.சி. சந்திரகுமார் (தே.மு.தி.க.) 69,199 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட சு.முத்துசாமி (தி.மு.க.) 58, 522 வாக்குகளும் பெற்று இருந்தனர். அப்போது பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட ராஜேஷ்குமாருக்கு 3,244 வாக்குகள் கிடைத்தன.

இதன்பின்னர் 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சந்திரகுமார் தி.மு.க.வில் சேர்ந்து போட்டியிட்டார். அப்போது அவர் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவிடம் தோல்வி அடைந்தார். தென்னரசு 64,879 வாக்குகளும், சந்திரகுமார் 57,085 வாக்குகளும் பெற்று இருந்தனர். தே.மு.தி.க வேட்பாளருக்கு 6,776 வாக்குகளும், பா.ஜனதா வேட்பாளருக்கு 5,549 வாக்குகளும் கிடைத்திருந்தன.

பின்னர் இந்த தொகுதியில் 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈ.வெ.ரா.வும், பின்னர் 2023-ம் ஆண்டு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் (தி.மு.க. கூட்டணி) வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்