சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை
|சென்னை அண்ணாநகரில் 1 மணி நேரத்தில் 10 செ.மீ மழை பெய்துள்ளது.
சென்னை,
தமிழகம் உள்ளிட்ட தென் மாநில கிழக்கு கடலோர பகுதிகளின் மேல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் மேல் என இரண்டு வளி மண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களில் மற்ற மாவட்டங்களில் மழை பெய்தாலும் சென்னையில் மழை இல்லாமல் இருந்தது. இப்படி இருக்கையில் காலை 11மணி அளவில் திடீரென இடி மின்னலுடன் தொடங்கிய கனமழை கடந்த 1மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்திருக்கிறது.சென்னை சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு, கொரட்டூர், வடபழனி, அண்ணா நகர், வில்லிவாக்கம், பாடி, அயனாவரம், அம்பத்தூர், நங்கநல்லூர், மேடவாக்கம், வேளச்சேரி, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணாநகரில் 1 மணி நேரத்தில் 10செ.மீ மழை பெய்துள்ளது. அண்ணாநகரில் 10 செ.மீ, மணலி, புதுநகர், கொளத்தூர், பெரம்பூர், அமைந்தகரையில் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இன்னும் 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையால் அண்ணா மேம்பாலம் அருகே தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
திடீர் கனமழையால் சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனமழை பெய்ததால் தி.நகர் ரங்கநாதன் தெரு மக்கள் நடமாட்டமின்றி விரிச்சோடி காணப்பட்டது. கடைசி நேரத்தில் விற்பனை சூடுபிடிக்கும் என காத்திருந்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
சென்னையில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் தீபாவளி விற்பனை மந்தமாகி உள்ளது. சென்னை கோயம்பேட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பூசனிக்காய் மழைநீரில் அடித்து செல்லப்பட்டது. கனமழையால் கோயம்பேட்டில் பூக்களின் விற்பனையும் மந்தமாகியது.
நாளை தீபாவளி பண்டிகைகொண்டாடப்படுவதையொட்டி பள்ளி,கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு தமிழக அரசு இன்று அரைநாள் விடுமுறை அளித்தது. இதனையடுத்து பள்ளிகளுக்கு அரைநாள் விடுப்பு அளிக்கப்பட்டதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியே வீட்டிற்கு சென்றனர். அரசு அலுவலர்கள் மழையில் சிரமத்துடன் அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும்நிலையில் கனமழை பெய்துவருவதால் பட்டாசுகளின் விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.