முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்
|முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவால் இன்று காலமானார்.
புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல்நல குறைவால் இன்று மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு ஆகியவற்றால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 92.
1932-ம் ஆண்டு செப்டம்பர் 26-ல், தற்போது பாகிஸ்தானில் உள்ள கா என்ற இடத்தில் பிறந்த அவர், 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். நாட்டின் 13-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் சுமார் 33 ஆண்டுகள் மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார். இதன்பின்னர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓய்வு பெற்றார்.
இந்தியாவின் பொருளாதாரம் தாராளமயம் ஆவதற்கான பணியில் முக்கிய பங்காற்றியதற்காக அவர் நினைவுகூரப்படுவார். அவருடைய பதவி காலத்தில், உலகின் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உருமாற்றியதில் பெரும் பங்கு வகித்த பெருமைக்குரியவர் ஆவார். பிரதமராவதற்கு முன்பு, 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் நிதி மந்திரியாகவும் இருந்துள்ளார்.
இதன்படி, 1991 முதல் 1996 வரை அப்போது பிரதமராக இருந்த பி.வி. நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதி மந்திரியாக பணியாற்றினார். சீக்கிய மதத்தவரான மன்மோகன் சிங், இந்து சமயம் அல்லாத முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றவர்.
இந்த சூழலில், உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு காலமான மன்மோகன் சிங்கை காண்பதற்காக, அக்கட்சியின் தேசிய தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் புதுடெல்லிக்கு புறப்பட்டுள்ளனர். இதேபோன்று, காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதேபோன்று காங்கிரஸ் தலைவர்கள் பலரும் டெல்லிக்கு சென்றுள்ளனர். பா.ஜ.க. தேசிய தலைவர் மற்றும் மத்திய சுகாதார மந்திரியான ஜே.பி. நட்டாவும் சென்றுள்ளார். இதனை முன்னிட்டு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்நிலையில் அவருடைய மறைவுக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.