தீப்பெட்டி தொழில் இனி வாழும்!
|தமிழ்நாட்டில் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் இருந்த நிலையில், இப்போது 500 ஆக குறைந்துவிட்டது.
சென்னை,
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியிலும், வேலைவாய்ப்பிலும் தீப்பெட்டி தொழில் முக்கிய இடத்தை வகிக்கிறது. அதுவும் பெண்களுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கிறது. தமிழகத்தில், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி, கழுகுமலை, குடியாத்தம், காவிரிப்பட்டினம், தர்மபுரி உள்ளிட்ட பல இடங்களில் தீப்பெட்டி தொழிலே பிரதான தொழிலாக இருக்கிறது. தமிழ்நாட்டில் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் இருந்த நிலையில், இப்போது 500 ஆக குறைந்துவிட்டது. அதே நேரத்தில், தீப்பெட்டி பண்டல் செய்யும் ஆலைகள் 3 ஆயிரத்துக்கு மேல் இருக்கிறது.
இந்தியாவில் பயன்படுத்தும் தீப்பெட்டிகளில் 95 சதவீதம் தமிழ்நாட்டில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. மீதமுள்ள 5 சதவீதம் அசாம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் உற்பத்தியாகின்றன. தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகள் உள்நாட்டில் மட்டுமல்லாமல், அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள், வங்கதேசம், நேபாளம் போன்ற நாடுகளுக்கும் பலத்த போட்டிகளுக்கு மத்தியில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு காலத்தில் தமிழ்நாட்டு தீப்பெட்டிகளைவிட பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள்தான் உலக மார்க்கெட்டில் முதலிடத்தில் இருந்தது. ஆனால், தமிழக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடும் முயற்சி செய்து, தரத்திலும் உயர்ந்து, விலையிலும் அவர்களோடு போட்டியிட்டு முதல் இடத்துக்கு முன்னேறினர்.
தமிழ்நாட்டில் தீப்பெட்டி தொழில் 8 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கிறது. இங்கு தயாரிக்கப்படும் தீப்பெட்டியின் விலையும் மிகக்குறைவு. இந்த நிலையில், கடந்த 2020-ல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லைட்டர்கள் இந்த தொழிலை நலிவடைய செய்தது. ஒரு மாதத்துக்கு 50 லட்சம் பண்டல்கள் (ஒரு பண்டலில் 600 தீப்பெட்டிகள் இருக்கும்) உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், சீன லைட்டர்கள் வரவுக்கு பின் 10 லட்சம் பண்டல்களின் உற்பத்தி குறைந்தது. தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. சில தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவில்பட்டியில் உள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையை பார்வையிட்ட நேரத்தில், அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள், தங்கள் வாழ்வுக்கு ஆப்பு வைக்கும் சீன லைட்டர்களுக்கு தடை விதிக்க மத்திய அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்று வைத்த கோரிக்கையை, அவரும் உடனடியாக எடுத்துச் சென்றார். முதல்-அமைச்சரின் கோரிக்கையையேற்று ரூ.20-க்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் சீன லைட்டர்களுக்கு மத்திய அரசாங்கம் தடை விதித்தது.
ஆனால், லைட்டர் விற்பனை செய்தவர்கள் இதற்கு மாற்று வழியை கண்டுபிடித்தனர். லைட்டரின் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, அதை லைட்டராக பொருத்தி விற்பனை செய்துவந்தனர். இதனால், தீப்பெட்டி தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மீண்டும் மத்திய அரசாங்கத்துக்கு கோரிக்கை விடப்பட்டது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனையும் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இந்த கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்த மத்திய அரசாங்கம், சீன லைட்டர்கள் மட்டுமல்லாமல், அதன் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கும் தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மட்டுமல்லாமல், தொழிலாளர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை அளித்துள்ளது. இனி தமிழ்நாட்டில் தீப்பெட்டி தொழில் வாழும், வளரும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தீப்பெட்டி தொழில் தொடங்கப்பட்டு 101 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் பல நூற்றாண்டுகள் இந்த தொழில் தழைக்கும்.