தடைக்கல்லாக இருக்கக்கூடாது !
|இப்போதெல்லாம் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது என்பது எளிதான காரியமல்ல.
சென்னை,
உலக அளவில் மக்கள்தொகையில் முதலிடம் வகிக்கும் இந்தியாவில் இளைஞர் சக்தி அதிகம். அதனால்தான், தங்கள் மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் வகையில், புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க ஒவ்வொரு மாநிலமும் முனைப்பு காட்டி வருகின்றன. மாநிலங்களுக்கு இடையே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் ஒரு ஆரோக்கியமான போட்டியே நிலவுகிறது. ஏதாவது பெரிய நிறுவனம் இந்தியாவுக்குள் தொழில் தொடங்க வந்தால், ஒவ்வொரு மாநில அரசும் புதிய சலுகைகளை அறிவித்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றன.
அந்தவகையில், இப்போது ஒடிசா மாநிலத்துக்கு ஒரு 'ஜாக்பாட்' அடித்திருக்கிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி, பலத்த எதிர்ப்பு காரணமாக மூடிச் சென்றுள்ள வேதாந்தா நிறுவனம், ஒடிசா மாநிலத்தில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 60 லட்சம் டன் அலுமினியம் சுத்திகரிப்பு மற்றும் 30 லட்சம் டன் அலுமினியம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை ரூ.1 லட்சம் கோடி முதலீட்டில் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது. வருகின்ற ஜனவரி மாதம் 'ஒடிசாவில் தயாரிப்போம்' என்ற மாநாடு நடக்க இருக்கிறது. அந்த மாநாட்டுக்கு தொழிலதிபர்களை அழைக்க மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜியிடம், வேதாந்தா நிறுவன தலைவர் அனில் அகர்வால் இந்த தகவலை தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளில், ஏற்கனவே வேதாந்தா நிறுவனம் ஒடிசாவில் முதலீடு செய்த ரூ.1 லட்சம் கோடி மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளது. இப்போது, மேலும் ரூ.1 லட்சம் கோடியை முதலீடு செய்வதன் மூலம் அங்கு தொழில் வளம் பெருகும். ஏறத்தாழ, ஆயிரம் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் தொடங்கப்படுவதற்கும் புதிய வழிவகை ஏற்படும். வேதாந்தா நிறுவனம் 1994-ல் தூத்துக்குடியில் தொடங்கிய தாமிர உருக்காலைக்கு, பொதுமக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பு 12-2-2018 அன்று உச்சம் தொட்ட நிலையில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பும், குழப்பமான நிலையும் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டும் அதை உறுதிசெய்தது.
தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தால், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனம் முன்வரவில்லை. இப்போது, சென்னை சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள், தொழிற்சங்கம் அமைப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 38 நாட்கள் நடத்திய வேலை நிறுத்தத்தை அரசு தலையிட்டு முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. என்றாலும், அந்த நேரத்தில் சாம்சங் நிறுவனம், 'வேறு மாநிலத்துக்கு தொழிற்சாலையை கொண்டுசெல்ல யோசிக்க வேண்டியது இருக்கும்' என்று சொன்னதையும், வேலை நிறுத்தத்தால் ரூ.840 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தற்போது சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்ததையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
இப்போதெல்லாம் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது என்பது எளிதான காரியமல்ல. பலத்த போட்டிகளுக்கு மத்தியில்தான் சலுகைகளை வாரி வழங்கி கொண்டுவர வேண்டியதிருக்கிறது. ஒரு பக்கம் தொழிலாளர்களின் கோரிக்கைகளிலும், எடுக்கும் நடவடிக்கைகளிலும் நியாயம் இருந்தாலும், மற்றொரு பக்கம் அது தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக அமைந்து விடக்கூடாது. ஏனென்றால், புதிதாக தொழிற்சாலைகளை தொடங்க வரும் நிறுவனங்கள், சாதக, பாதகங்களை பார்த்துத்தான் காலடி எடுத்து வைக்கும். எனவே, இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் பெருகட்டும்.