இலங்கை சிறையில் தமிழக மீனவர்களுக்கு அவமரியாதையா?
|தமிழக மீனவர்களும் இலங்கை சிறைகளில் நாகரிகமாக நடத்தப்பட வலியுறுத்த வேண்டும்.
சென்னை,
தமிழகத்தில் வங்கக் கடலோரம் சென்னை முதல் குமரி வரை 1,076 கிலோ மீட்டர் நீளத்துக்கு இருக்கிறது. இந்த கடலோர பகுதியில் இருக்கும் நூற்றுக்கணக்கான கிராம மக்களுக்கு மீன்பிடி தொழில்தான் பிரதானம். ஆனாலும், நித்தமும் செத்துப் பிழைக்க வேண்டிய வாழ்க்கையாகவே அவர்களுக்கு கழிந்து வருகிறது. காரணம், இயற்கை சீற்றத்தை தாங்கிய அவர்கள், இலங்கை கடற்படையின் தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது. கூடுதலாக இப்போது, கடற்கொள்ளையர்களால் புது ஆபத்து ஏற்பட்டு வருகிறது.
இதுவரை எல்லைத்தாண்டி வந்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களிடம் இருந்து படகு, வலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இப்போது பின்பற்றப்படும் நடவடிக்கைகளில் இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி அவமரியாதை செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இந்திய கடற்படையினர் நாகரிகமாக நடந்துகொள்கிறார்கள். சமீபத்தில்கூட இவ்வாறு கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் மிகவும் கண்ணியத்துடன் நடத்தப்பட்டு இருக்கிறார்கள். அதேநேரத்தில் தமிழக மீனவர்களை கைது செய்யும்போது, இலங்கை கடற்படையினர் கண் மூடித்தனமாக தாக்கி, அவர்களிடம் உள்ள வலைகளை கிழித்தெறிந்து அட்டூழியத்தில் ஈடுபடுகிறார்கள். அதற்குப் பிறகும், இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு தமிழக மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த அபராதத் தொகையை கட்ட முடியாத மீனவர்களுக்கு சிறை தண்டனை அளிக்கப்படுகிறது.
இலங்கை அரசின் சட்டமே அவ்வாறாகத்தான் இருக்கிறது என்று நினைத்தால், கூடுதல் அபராதம் என்பதெல்லாம் சமீப காலமாகத்தான் விதிக்கப்படுகிறது. இதில் இருந்தே இலங்கை அரசின் நடவடிக்கையில் குழப்பம் இருப்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. ஏற்கனவே உள்ள கொடுமைகளுடன் இப்போது இன்னொரு கொடுமையும் சேர்ந்திருக்கிறது. சமீபத்தில் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களை விசாரித்த இலங்கையின் மன்னார் கோர்ட்டு, அதில் 3 பேர் 2-வது முறையாக எல்லை தாண்டிவந்து மீன்பிடித்ததாக கூறி, அவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தது. மீதம் உள்ள 5 மீனவர்களுக்கும் இலங்கை பணத்தில் தலா ரூ.50 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.
இந்த அபராதத் தொகையை கட்ட ராமநாதபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் தன் கையில் இருந்து பணத்தை கொடுத்து உதவினார். அந்த பணத்தை வைத்து, அவர்கள் அபராத தொகையையும் கட்டிவிட்டனர். ஆனால், விதிக்கப்பட்ட அபராதத் தொகையை உடனடியாக கட்டவில்லை என்று குற்றம்சாட்டி, 5 தமிழக மீனவர்களுக்கு இலங்கை சிறையில் மொட்டை அடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, சிறையில் சாக்கடையை தூர்வாரச் சொல்லியும், கழிப்பறைகளை சுத்தம் செய்ய சொல்லியும் பல கொடுமைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.
தமிழக மீனவர்களை மொட்டை அடித்து இழிவுபடுத்த இலங்கை சிறை அதிகாரிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?, அந்நாட்டு சட்டத்துக்கு புறம்பான இந்த விரும்பத்தகாத செயலை இந்திய அரசாங்கம் உடனடியாக கண்டிக்க வேண்டும். இலங்கை அரசை தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை தட்டிக்கேட்க வேண்டும். இதுபோன்று, இந்திய கடல் எல்லையில் கைது செய்யப்படும் இலங்கை மீனவர்கள் தமிழக சிறைகளில் எந்த அளவுக்கு நாகரிகமாக நடத்தப்படுகிறார்கள் என்பதையும் இலங்கை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தி, அதே முறையில் தமிழக மீனவர்களும் இலங்கை சிறைகளில் நாகரிகமாக நடத்தப்பட வலியுறுத்த வேண்டும்.