< Back
தலையங்கம்
பல விடைகளை தரப்போகும் தேர்தல்
தலையங்கம்

பல விடைகளை தரப்போகும் தேர்தல்

தினத்தந்தி
|
17 Oct 2024 7:07 AM IST

இந்த தேர்தல்கள் பல முக்கிய வினாக்களுக்கு விடை காணப்போகிறது.

ஜம்மு காஷ்மீர், அரியானா தேர்தல் முடிவுகள் பா.ஜனதாவுக்கும், இந்தியா கூட்டணிக்கும் சரி சமமாக தெம்பு அளித்த நிலையில் இப்போது மராட்டியத்திலும், ஜார்கண்டிலும் அதை பின்தொடர்ந்து சட்டசபை தேர்தல் வருகிறது. அரியானாவில் பா.ஜனதா ஹாட்ரிக் வெற்றியை பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. அதுபோல ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணியின் தேசிய மாநாடு கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது. இப்போது தேர்தல் ஆணையம் 288 தொகுதிகளை கொண்ட மராட்டியத்துக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20-ந்தேதியும், 81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்டுக்கு நவம்பர் 13, 20-ந்தேதிகளில் இரு கட்டமாகவும் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் இந்த தேர்தலோடு கேரளா, கர்நாடகம், மராட்டியம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 48 சட்டசபை தொகுதிகளுக்கும், 2 மக்களவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல்கள் பல முக்கிய வினாக்களுக்கு விடை காணப்போகிறது. மராட்டியத்தில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பிளவுபட்டு இரு கட்சிகளாக செயல்பட்டபிறகு நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. சிவசேனா கட்சி பிளவுபட்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியாகவும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுபட்டு அஜித்பவார் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது.

இதில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை நடத்தி வருகிறது. இந்த கூட்டணி 'மகாயுதி' (மாபெரும் கூட்டணி) என்று அழைக்கப்படுகிறது. எதிர் அணியில் தாய் கட்சிகளான சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து களத்தில் இறங்கியுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கட்சி 7 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், பா.ஜனதா கட்சி 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

எதிர் அணியில் காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி 9 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் எதிர்க்கட்சி கூட்டணி இதே வெற்றி சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கிறது. இரு கூட்டணிகளிலும் தொகுதி பங்கீடு என்ற நிலை சுமுகமாக முடிந்தால்தான் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஜார்கண்டை பொறுத்தமட்டில் ஆளுங்கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்து ஒரு அணியாகவும், பா.ஜனதா கூட்டணி எதிர் அணியிலும் களம் காண்கின்றன.

இரு அணிகளுமே சலுகைகளை அள்ளிவீசி வாக்குறுதிகளை வழங்கியுள்ளன. முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் 5 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்துள்ள நிலையில் அது தேர்தலில் எதிரொலிக்குமா? என்பதற்கும் விடை தெரிந்துவிடும். வயநாடு தொகுதி ஏற்கனவே ராகுல்காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. அந்த தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் இப்போது காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பதால் அவரது நாடாளுமன்ற அரசியல் பிரவேசத்தின் நுழைவு வாயிலாக கருதப்படுகிறது. ஆக எல்லா வகைகளிலும் இந்த தேர்தல் ஒரு புதிய தொடக்கத்துக்கு வழிகாட்டும்.

மேலும் செய்திகள்