சர்க்கரை நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்பட என்ன காரணம்?
|ரத்தச் சர்க்கரை, ரத்த கொதிப்பு, உடல் எடை மற்றும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு மற்றவர்களை விட இரண்டு மடங்கு அதிகம். மேலும் இளம் வயதிலேயே பக்கவாதம் ஏற்படுவதற்கு சர்க்கரை நோய் முக்கிய காரணமாகும். பக்கவாதம் ரத்த ஓட்ட தடை (இஸ்கிமிக்) பக்கவாதம், ரத்தக்கசிவு (ஹெமரேஜிக்) பக்கவாதம் என்று இரண்டு வகைப்படும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தச் சர்க்கரை கட்டுக்குள் இல்லையெனில் ரத்த நாளங்களில் தடிப்பு தோல் அழற்சி ஏற்பட்டு ரத்தக் கட்டிகள் உருவாக வழி வகுக்கின்றன. இது மூளைக்குச் செல்லும் குருதி ஓட்டத்தை குறைத்து இஸ்கிமிக் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. கூடுதலாக உயர் ரத்த அழுத்தம் உள்ள சில சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த நாளங்கள் வெடித்து, சீர் குலைந்து, ரத்தக் கசிவு ஏற்படுவதால் ரத்தக் கசிவு பக்கவாதம் உண்டாகிறது.
இதற்கு தீர்வாக ரத்தச் சர்க்கரை, ரத்த கொதிப்பு, உடல் எடை மற்றும் ரத்தத்தில் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளான பச்சை காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், மெலிந்த புரதங்கள், மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளவேண்டும்.
கார்போஹைட்ரேட், சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி செய்து உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மேலும், டி.பி.ஏ (tPA)போன்ற மருந்துகள், கரோடிட் எண்டார்டிரெக்டமி கரோடிட் ஆஞ்ஜியோப்ளாஸ்டி போன்ற அறுவை சிகிச்சை முறைகளாலும் பக்கவாதத்தை எளிதில் குணமாக்க வாய்ப்புள்ளது.