இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் நோய்... எச்சரிக்கை மணி அடித்த பொருளாதார ஆய்வறிக்கை
|தமிழ்நாட்டில் ஆண்கள் 37 சதவீதமும், பெண்கள் 40.4 சதவீதம் பேரும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
நாடாளுமன்றத்தில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று பொருளாதார ஆய்வறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், கடந்த நிதியாண்டின் நிதி நிலை, பொருளாதார வளர்ச்சி மற்றும் நடப்பு நிதியாண்டிற்கான கணிப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஆரோக்கியம் குறித்து இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் உலக உடல் பருமன் கூட்டமைப்பு வெளியிட்ட தகவல்களை சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்துள்ளது.
இதுதொடர்பாக பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்தியாவில் பெரியவர்கள் மத்தியில் உடல் பருமன் ஒரு தீவிர கவலையாக உருவாகி வருகிறது. சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த நன்கு பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது அதிகரித்துள்ளது. உடல் உழைப்பு குறைந்து வருகிறது. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது குறைந்துள்ளது. இதன் காரணமாக நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் உடல் பருமன் நோய்கள் அதிகரிக்கின்றன.
இந்தியாவின் மொத்த நோய் பாதிப்புகளில் 54 சதவீதம் ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படுகிறது. இந்தியாவில் பெரியவர்களுக்கான உடல் பருமன் விகிதம் மும்மடங்கு அதிகமாக இருப்பதாக மதிப்பீடுகள் காட்டுகின்றன. வியட்நாம், நமீபியாவைத் தொடர்ந்து இந்தியாவில் குழந்தைகளிடையே உடல் பருமன் நோய் அதிகமாக உள்ளது.
தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி, கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் உடல் பருமன் நோய் கணிசமாக அதிகரித்திருக்கிறது. நகர்ப்புற ஆண்களில் 29.8 சதவீதம் பேரும், கிராமப்புற ஆண்களில் 19.3 சதவீதம் பேரும் உடல் பருமனை எதிர்கொள்கின்றனர்.
தேசிய குடும்ப நல ஆய்வு-5 ல் 18-69 வயதிற்குட்பட்ட ஆண்களில் உடல் பருமனை எதிர்கொள்வது 18.9 சதவீதமாக இருந்தது. தேசிய குடும்ப நல ஆய்வு-5ல் 22.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. பெண்களைப் பொருத்தவரை, இது 20.6 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக அதிகரித்துள்ளது.
டெல்லி போன்ற சில மாநிலங்களில் உடல் பருமன் உள்ள பெண்களின் விகிதம் 41.3 சதவீதமாகவும், ஆண்கள் 38 சதவீதமாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் ஆண்கள் 37 சதவீதமும், பெண்கள் 40.4 சதவீதமும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் பெண்களுக்கு 36.3 சதவீதமாகவும், ஆண்களுக்கு 31.1 சதவீதமாகவும் உள்ளது.
எனவே, மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பெறுவதற்கு உடல்பருமன் நோய் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள.. https://x.com/dinathanthi