மழைக்கால ஆரோக்கியம்: கொசுக்களால் பரவும் நோய்களும்.. சித்த மருத்துவ தீர்வும்
|டெங்கு காய்ச்சல் குணமாக, நிலவேம்பு குடிநீர் பெரியவர்களுக்கு 60 மிலி வீதம் இருவேளையும், சிறுவர்களுக்கு 30 மிலி வீதம் இருவேளையும் ஒரு வாரம் குடிக்க வேண்டும்.
மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் கொசுக்கள் மூலம் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகம். எனவே, மிகுந்த கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
டெங்கு காய்ச்சல்: மழைக்காலம் டெங்கு கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு சரியான நேரமாக இருக்கிறது, ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் கடிப்பதன் மூலம் இந்த நோய் பரவுகிறது, இந்நோயில் கடுமையான காய்ச்சல், வாந்தி, எலும்பு வலி, கண்களுக்குப் பின்னால் வலி போன்ற அறிகுறிகளைக் காட்டுகிறது, இரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும், இந்நிலை தீவிரமானால் உயிரிழப்பு கூட ஏற்படும், ஆகவே காய்ச்சல் வந்தவுடன் அருகிலுள்ள மருத்துவமனை சென்று சிகிச்சை பெறுவது மிக அவசியம்.
டெங்குவை தடுக்க, உங்கள் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொசுக் கடியிலிருந்து பாதுகாக்க முழு கை மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணியவும். ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும், அல்லது கொசுத் திரைகளைப் பயன்படுத்தவும். டெங்கு பரிசோதனை செய்து, நிலைமையை உறுதி செய்து, தகுந்த சிகிச்சையுடன் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்.
சித்த மருத்துவம்: நிலவேம்பு குடிநீர்-பெரியவர்களுக்கு 60 மிலி வீதம் இருவேளையும், சிறுவர்களுக்கு -30 மிலி வீதம் இருவேளையும் தொடர்ந்து ஒரு வாரம் குடிக்க வேண்டும். இரத்த தட்டணுக்கள் குறைந்தால் கூடவே பப்பாளி இலைச்சாறு பெரியவர்கள் -30 மிலி வீதம் இருவேளை, சிறுவர்கள் -10 மிலி வீதம் இருவேளை சுவைக்காக தேன் கலந்து குடிக்க வேண்டும். இருமல் இருந்தால் ஆடாதோடை மணப்பாகு -பெரியவர்களுக்கு -15 மிலி வீதம் இருவேளை, சிறுவர்களுக்கு -5 மிலி வீதம் இருவேளை உட்கொள்ள நல்ல பலனை தரும்.
சிக்குன்குனியா காய்ச்சல்: மழைக்காலத்தில் வருகின்ற மற்றொரு நோய் சிக்குன்குனியா. இது ஏடிஸ் எஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் கொசுக்கள் கடித்த மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் தொடங்கி கடுமையான மூட்டு வலி, காய்ச்சல், உடல் சோம்பல், பலவீனம் மற்றும் கடும் மூட்டு வலியால் நொண்டி நடக்கச் செய்யும். உடல் குறிகுணங்கள் கடுமையானதாகவும் நீண்ட காலமாகவும் இருக்கலாம்.
சிக்குன்குனியாவை தடுக்க, கொசு வலைகளை பயன் படுத்தலாம். வீட்டு ஜன்னல்கள், கதவுகளை மூடி வைப்பது நல்லது. சிக்குன்குனியா காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீருடன், அமுக்கரா மாத்திரை, வாத ராட்சசன் மாத்திரை,விஸ்ணு சக்கர மாத்திரைகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.
மலேரியா காய்ச்சல்: இது அனாபிலே வகை கொசுக்கள் கடிப்பதால் ஏற்படும் பிளாஸ்மோடியம் வகை பாரசைட் நோயாகும். மலேரியா நோயில் குளிர் காய்ச்சல், தலைவலி, வாந்தி, இருமல், இதயத் துடிப்பு தீவிரமாதல் போன்ற குறி குணங்கள் இருக்கும்.
மலேரியாவை தடுக்க, உங்கள் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தேங்கி நிற்கும் தண்ணீரில் தான் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. உறங்கும்போது கை மற்றும் கால்களை மூடி வைத்திருக்கும் பாதுகாப்பு ஆடைகளை அணிய வேண்டும்.