< Back
ஆரோக்யம்
மழைக்காலத்தில் அச்சுறுத்தும் சைனசைடிஸ் நோயை குணப்படுத்துவது எப்படி?
ஆரோக்யம்

மழைக்காலத்தில் அச்சுறுத்தும் சைனசைடிஸ் நோயை குணப்படுத்துவது எப்படி?

தினத்தந்தி
|
9 Nov 2024 6:00 AM IST

சைனசைடிஸ் சிகிச்சைக்கு சித்த மருந்துகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மழைக்காலத்தில் தலைநீர் கோர்ப்பதால் நீர்க்கோவை எனப்படும் சைனசைடிஸ் என்னும் நோய் ஏற்படுகிறது. இந்நோயில் கடுமையான தலைவலி, தலைபாரம், மூக்கடைப்பு, தும்மல், கண்களில் பாரம் போன்ற குறி குணங்கள் ஏற்படும்.

சைனசைடிஸ் நோய்க்கான சிகிச்சை முறைகள்:-

* சுத்தமான உப்பு நீர்க்கரைசலை ஒரு மூக்குத் துளையில் விட்டு இன்னொரு மூக்குத் துளை வழியே வெளியேற்ற வேண்டும்.

* நன்றாகக் கொதிக்க வைத்த நீரில் மஞ்சள் தூள் போட்டு ஆவி பிடிக்க வேண்டும் அல்லது நொச்சி இலைகளை நன்றாகத் தண்ணீரில் கொதிக்கவைத்து ஆவி பிடிக்க வேண்டும்

* தும்பைப்பூ மலர்களை கசக்கி ஒரு சொட்டு வீதம் இரு மூக்குத்துளைகளிலும் விடலாம்

* நீர்க்கோவை மாத்திரையை நீரில் உரசி நெற்றி, கன்னத்தில் பற்றிடலாம்.

* தாளிசாதி சூரணம்-1 கிராம் அல்லது திரிகடுகு சூரணம்-1 கிராம், சிவனார் அமிர்தம்-200 மிகி,பலகரை பற்பம்-200 மிகி கஸ்தூரி கருப்பு-200 மிகி இவைகளை மூன்று வேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

* தலைக்கு தேய்த்து குளிக்க சுக்குத்தைலம், அரக்குத்தைலம், பீனிசத் தைலம், நாசிரோக நாசத்தைலம் இவைகளில் ஒரு மருந்தை பயன்படுத்தலாம்.

சைனசைடிஸ் தடுப்பு முறைகள்:-

* மழைநீரில் நனைந்தாலோ அல்லது தலைக்கு குளித்தாலோ நன்கு ஈரம் காய தலையை துடைத்துக் கொள்ள வேண்டும்

* இளவெதுவெதுப்பான வெந்நீர், மிளகு கலந்த பால், சுக்கு கலந்த பால் போன்றவற்றை குடிப்பது நல்லது

* நோய் எதிர்ப்பு சக்திக்குரிய கீரைகள், பழங்கள், பால், முட்டை, பயறுவகைகள் போன்றவற்றை தினசரி உட்கொள்ள வேண்டும்.

* ஜன்னலோர பேருந்து பயணம், மின்விசிறி காற்றுக்கு நேராக கீழே படுத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

* இரவு ஆறு முதல் ஏழு மணி நேரம் தொடர்ச்சியாக தூங்கவேண்டும்.

* பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

ஆஸ்துமா பாதிப்பு

மழைக்காலம் மற்றும் பனிக்காலத்தில் ஆஸ்துமா பாதிப்புள்ளவர்கள் அதிக சிரமப்படுகிறார்கள்.

இரைப்பு நோய் (ஆஸ்துமா) என்பது மூச்சு விடுவதற்கு சிரமத்தை தருகின்ற நோய் ஆகும். இது தூசி, புகை, பனி, குளிர் காற்று, காற்று மாசுபாடு, மலைப்பகுதிகளில் பயணம் செய்வது, நுரையீரலை தீவிரமாக பாதிக்கும் பாக்டீரியா, வைரஸ் நோய்கள் போன்ற பல காரணங்களால் இந்த நோய் வருகிறது.

இரைப்பு நோயைக் குணப்படுத்த துளசி, ஆடாதோடை, கஞ்சாங்கோரை, கரிசலாங்கண்ணி, கண்டங்கத்திரி, தூதுவளை, நஞ்சறுப்பான் என்று ஏராளமான மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளது.

சித்த மருந்துகள்:

1) தாளிசாதி சூரணம் ஒரு கிராம், கஸ்தூரி கருப்பு 100 மி.கி., சிவனார் அமிர்தம் 100 மி.கி., பவள பற்பம் 100 மி.கி., இவைகளை தேன் அல்லது வெந்நீரில் மூன்று வேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

2) சுவாசகுடோரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் காலை, மதியம், இரவு 3 வேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

3) கஸ்தூரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.

4) கண்டங்கத்திரி லேகியம், தூதுவளை நெய், ஆடாதோடை மணப்பாகு இவைகளில் ஒன்றை காலை, இரவு உணவுக்கு பின் எடுத்துக்கொள்ள வேண்டும்.

5) குளிர்ந்த பொருள்கள் சாப்பிடுதல், பனிக்காற்றில் நடமாடுதல், ஊதுபத்தி, கொசுவர்த்தி சுருள்களின் புகை, புகைப்பழக்கம், ஒட்டடை அடித்தல் போன்றவற்றை இரைப்பு நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

சேற்றுப்புண்

மழைக்காலத்தில் வருகின்ற மற்றொரு நோய் "சேற்றுப்புண்" ஆகும். விரல் இடுக்குகளில் வெள்ளை நிறத்தில் புண்கள் மற்றும் நீர் கசிவு, அரிப்பு, வலி இவை காணப்படும். சேற்றுப்புண் பாதித்த பகுதிகளை நல்ல தண்ணீரில் நன்றாகக் கழுவி படிகார நீர் விட்டு துடைத்து, கிளிஞ்சல் மெழுகு அல்லது வங்க வெண்ணெய் போட்டு வர சேற்றுப்புண் ஆறி வரும்.

மேலும் செய்திகள்