ஆரோக்யம்
சர்க்கரை நோயை ஆரம்பக்கட்டத்திலேயே எப்படி கண்டறிவது?
ஆரோக்யம்

சர்க்கரை நோயை ஆரம்பக்கட்டத்திலேயே எப்படி கண்டறிவது?

தினத்தந்தி
|
22 Jun 2024 8:47 AM IST

சர்க்கரை நோயும், ரத்த கொதிப்பும் சில ஆபத்து காரணிகளை பகிர்ந்து கொள்வதால், சர்க்கரை நோய் இருந்தால் ரத்த கொதிப்பும், ரத்தக் கொதிப்பு இருந்தால் சர்க்கரை நோயும் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

சர்க்கரை நோயை (நீரிழிவு நோய்) ஆரம்பகட்டத்திலேயே கண்டறிவதற்கு ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் (ஓ.ஜி. டி.டி) பரிசோதனை செய்ய வேண்டும்.

இப்பரிசோதனையில் முதலில் வெறும் வயிற்றில் ரத்தச் சர்க்கரை பரிசோதனை (பாஸ்டிங் பிளட் சுகர்) செய்யப்படுகிறது. பின்னர் 75 கிராம் குளுக்கோஸ் தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு, இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை ரத்தச் சர்க்கரை அளவு பரிசோதனை செய்து பார்க்கப்படுகிறது.

வெறும் வயிற்றில் 100 மி.கி/டெசிலிட்டருக்கு குறைவாகவும், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவு 140 மி.கி/டெசிலிட்டருக்கு குறைவாகவும் இருந்தால் அவர்களுக்கு நீரிழிவு நோய் இல்லை என்று அர்த்தம்.

வெறும் வயிற்றில் 101 மி.கி/டெசிலிட்டர் முதல் 125 மி.கி/டெசிலிட்டர் வரை ரத்தச் சர்க்கரை இருந்தால், அது இம்பேர்டு பாஸ்டிங் குளுக்கோஸ் ஆகும். இது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையாகும். இதை ப்ரீடயாபட்டீஸ் என்றும் அழைப்பார்கள். சாப்பிட்ட பின் ரத்தச் சர்க்கரை அளவு 141 மி்.கி/டெசிலிட்டர் முதல் 199 மி.கி/டெசிலிட்டர் வரை இருந்தால் இம்பேர்டு குளுக்கோஸ் டாலரன்ஸ் என்று பெயர். இதுவும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையாகும்.

வெறும் வயிற்றில் 126 மி.கி/டெசிலிட்டருக்கு மேல் இருந்தாலும், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து ரத்த சர்க்கரை அளவு 200 மி.கி/டெசிலிட்டருக்கு மேலிருந்தால் அவர்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது என்று அர்த்தம்.

நீரிழிவு நோய் அறிகுறி இல்லாதவர்களுக்கும் இந்த ஓரல் குளுக்கோஸ் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும். இந்த ஓரல் குளுக்கோஸ் டெஸ்ட் கீழ்கண்டவர்களுக்கு கண்டிப்பாக செய்து பார்க்க வேண்டும்.

1. 40 வயதை கடந்தவர்கள்.

2. நீரிழிவு நோய் உள்ள குடும்ப பாரம்பரியத்தில் பிறந்தவர்கள்.

3. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்.

4. உயர் ரத்த கொலஸ்ட்ரால் உள்ளவர்கள்

5. உடல் பருமன் உள்ளவர்கள்.

6. உடல் உழைப்பு இல்லாமல் வேலை செய்பவர்கள்.

7. கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள்.

8. அதிக எடை உள்ள குழந்தை பெற்றெடுத்தவர்கள்.

மேலும் நீரிழிவு நோய் ஆரம்ப காலத்திலேயே கண்டறிவதற்கு மூன்று மாத ரத்த சர்க்கரையின் சராசரியை மதிப்பிடும் எச்.பி.எ1சி பரிசோதனையும் நமக்கு பெரிதும் உதவி புரிகிறது.

சர்க்கரை நோயும் ரத்த அழுத்தமும்..

சர்க்கரை நோயும், ரத்த கொதிப்பும் சில ஆபத்து காரணிகளை பகிர்ந்து கொள்வதால், சர்க்கரை நோய் இருந்தால் ரத்த கொதிப்பும், ரத்தக் கொதிப்பு இருந்தால் சர்க்கரை நோயும் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இந்த ஆபத்து காரணிகளில் முக்கியமானவையாக கருதப்படுவது.

1. இன்சுலின் எதிர்மறை நிலை (இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்)

2. ரத்த நாளங்களின் அழற்சி.

3. ஆக்சிஜன் ஏற்ற அழுத்தம் (ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்)

4. உடல் பருமன்.

5. எண்டோதிலியல் செல்களின் செயல் இழப்பு.

6. தமணியில் கொழுப்பு படிதல் மற்றும் தடிப்பு ஏற்படுதல்.

7. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, குறிப்பாக எல்.டி.எல் கொலஸ்ட்ரால்.

8. நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்படுதல்.

9. உட்கார்ந்த வாழ்க்கை முறை (செடண்ட்ரி லைப் ஸ்டைல்)

10. புகை பிடிக்கும் பழக்கம்.

11. மதுப்பழக்கம்.

இந்த ஆபத்து காரணிகள் இரண்டு நோய்களுக்கும் பொதுவாக இருப்பதால், ஒரு நோய் பாதிப்பு ஏற்பட்டால் மற்ற நோய் பாதிப்பும் கூட இணைந்து விடுகிறது.




மேலும் செய்திகள்