< Back
ஆரோக்யம்
நோயின்றி வாழ சிரத்திற்கு சிறப்பான எண்ணெய்க் குளியல்
ஆரோக்யம்

நோயின்றி வாழ சிரத்திற்கு சிறப்பான எண்ணெய்க் குளியல்

தினத்தந்தி
|
19 Jun 2024 1:20 PM IST

எண்ணெய் தேய்த்து வெயிலில் காய்ந்த பிறகு குளிப்பதால், உடலில் ரத்த ஓட்டம் சீராகும். தசைகள் நெகிழ்ந்து நன்றாக செயல்படும்.

சித்த மருத்துவம் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார் டாக்டர் ஒய்.ஆர்.மானெக் ஷா. அரசு மருத்துவரான இவர், நாடி பிடித்து பார்த்தே நோய்களைத் துல்லியமாக கண்டறிவதில் வல்லவர்.

மருத்துவ மூலிகைகளை அடையாளம் காண்பதிலும் அவற்றை வளர்க்கும் முறைகளிலும், அவற்றைப் பயன்படுத்தி மருந்துகளை உருவாக்குவதிலும் மிகுந்த அனுபவம் பெற்ற டாக்டர் மானெக் ஷா, மக்களுக்கு பயனுள்ள 10-க்கும் மேற்பட்ட மருத்துவ நூல்களை எழுதியிருக்கிறார். நோய்களுக்கான அறிகுறிகள் மற்றும் அவற்றை கண்டறிந்து பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கான மருத்துவக் குறிப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்.

அவ்வகையில், புத்துணர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் எண்ணெய்க் குளியல் குறித்து விரிவாக பார்ப்போம்.

டாக்டர் மானெக் ஷா

டாக்டர் மானெக் ஷா

நமது முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக கண்டுபிடித்த எண்ணற்ற இயற்கை வழிகளில் எண்ணெய்க் குளியலும் ஒன்று. நாம் வாழும் தென்னிந்தியப் பகுதி அதிக வெப்பம் நிறைந்தது. அதனால் குறைந்தபட்சம் வாரம் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடல் நலத்திற்கு ஏற்றது. பல தலைமுறைகளாய்க் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இப்பழக்கம் இக்காலத்திற்கும் கட்டாயம் தேவை.

"வீறுசதுர் நாட்கொரு கால் நெய்முழுக்கைத் தவிரோம் ,

எண்ணெய் பெறின் வெந்நீரிற் குளிப்போம்"

- என்ற தேரையரின் பிணியணுகா ஒழுக்க விதியின் படி எண்ணெயிட்டுத் தலை மூழ்குதல் இன்றியமையாதது. மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்ற கிழமைகளும் கூறப்பட்டுள்ளன.

பெண்கள்: செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும்

(செவ்வாய் = உடல் நலக்குறைவை குறைக்கும்)

(வெள்ளி = பொருட் செலவைக் குறைக்கும்)

ஆண்கள்: புதன் மற்றும் சனி ஆகிய தினங்களிலும்

(புதன் = செல்வத்தைப் பெருக்கும் )

(சனி = விரும்பியவற்றை அடையலாம்).

எண்ணெய்க் குளியலுக்கு காலை நேரமே சிறந்தது.

எண்ணெய் குளியலுக்கு பசுநெய், நல்லெண்ணெய், சந்தனாதி எண்ணெய் சிறந்தது, எண்ணெயைக் காய்ச்சி இளஞ்சூட்டில் உபயோகித்தல் வேண்டும். எண்ணெய் தேய்த்த பின்னர் சுமார் 1-2 மணி நேரம் வெயிலில் காய வேண்டும்.அதன் பிறகு வெந்நீரில் குளித்து ஓய்வெடுக்க வேண்டும்.

எண்ணெய் தேய்த்து வெயிலில் காய்ந்த பிறகு குளிப்பதால், உடலில் இரத்த ஓட்டம் சீராகும். தசைகள் நெகிழ்ந்து நன்றாக செயல்படும். இதனால் உடலுக்குள் பிராண வாயுவின் விழுக்காடு அதிகரிக்கும் மேலும் உடலுக்கு புத்துணர்ச்சியை அதிகரிக்கச் செய்யும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், வியர்வை மூலம் தோலிலுள்ள கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு விடுகிறது. எலும்புகள் பலம் பெறும். சருமம் பொலிவுடனும் பாதுகாப்பாகவும் திகழும். தலை முடிக்கும் வலு சேர்க்கும்.கண் ஒளி கூடும்.

எண்ணெய் முழுக்கு செய்த நாளில் பகல் தூக்கம், புணர்ச்சி, குளிர்பானங்கள் அருந்துதல், வெயிலில் அலைதல், கடின வேலைகளை மேற்கொள்ளுதல், முதலியன கூடாது.

உடலுக்கு தேய்த்து குளிக்க "நலங்கு மாவு" போன்றவற்றையும், தலைக்கு பஞ்ச கற்ப குளியலையும் பயன்படுத்துவதே சிறப்பானது.

"நலங்கு மாவு" செய்முறை:

பாசிப்பயறு, வெட்டிவேர், சந்தனம், விலாமிச்சு வேர், கோரைக்கிழங்கு, கார்போகரிசி, கிச்சிலி கிழங்கு சேர்ந்தது. உடலில் வியர்வை நாற்றம் இருந்தால் இவற்றுடன் ஆவாரம் பூ சேர்த்து கொள்ளலாம்.

பஞ்சகற்ப குளியல் முறை:-

"மிருகமதம் பித்தமணி வேம்புகடு நெல்லி

கருங்குரத்துப் பாலரைத்துக் காய்ச்சி - யொருமிட

விங்கற்ப நோய்க்கு மிடமின்றா மெய்ஞான்று

மைங்கற்ப மீதே யறி"

-"பதார்த்த குண சிந்தாமணி"

இந்த பாடலில் கூறியுள்ள; கஸ்தூரி மஞ்சள், மிளகு, கடுக்காய் தோல், வேப்ப வித்து, நெல்லிவற்றல் இவற்றைப் பொடித்து பசுவின் பால் விட்டரைத்து, சிறுதீயில் வைத்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் தலை முழுமையும் தேய்த்து சிறிது நேரத்திற்குப் பின் தலைமுழுகி வர வேண்டும்.

பயன்கள்:

உடல் சூடு, தூக்கமின்மை, தலை அரிப்பு, பொடுகு, முடி உதிர்வு முதலிய பல பிணிகள் நீங்குவதுமின்றி கண்களின் ஒளி கூடும்.

நாளைப் புத்துணர்வாக்கவும் , உடல் களைப்பை போக்கவும், நோயின்றி நெடுநாள் வாழவும் எண்ணெய்க் குளியலை முறைப்படி தவறாமல் கடைபிடிப்போம்.

மேலும் செய்திகள்