ஆரோக்யம்
Diabetes and kidney disease
ஆரோக்யம்

சர்க்கரை நோயும் சிறுநீரக பாதிப்பும்... உதாசீனப்படுத்தாமல் உடனே பரிசோதனை செய்யுங்கள்

தினத்தந்தி
|
19 Jun 2024 1:47 PM IST

ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை உரிய நேரத்தில் பரிசோதனை செய்து கண்டறியாவிட்டாலோ அல்லது உதாசீனப்படுத்தினாலோ சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது.

உயிர் காக்கும் உன்னத சேவையான மருத்துவ சேவையில் தனி முத்திரை பதித்து மக்களின் நன்மதிப்பை பெற்றவர் டாக்டர் வி.சத்தியநாராயணன். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் மற்றும் பொது மருத்துவரான இவர், 500-க்கும் மேற்பட்ட இலவச மருத்துவ முகாம்களை நடத்தி உள்ளார். உடல் ஆரோக்கியம் மற்றும் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்காக 7 கின்னஸ் சாதனை சான்றிதழ்களை பெற்றுள்ளார்.

இதுதவிர, இன்றைய தலைமுறையினரை தொடர்ந்து அச்சுறுத்தும் நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், எளிய முறையில் மருத்துவ தகவல்களையும் வெளியிட்டு வருகிறார். அவ்வகையில், நீரிழிவு நோயின் உச்சபட்ச தாக்கமான சிறுநீரக பாதிப்பு மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து டாக்டர் வி.சத்தியநாராயணன் அளித்துள்ள விளக்கத்தை பார்ப்போம்.

சிறுநீரக பாதிப்புக்கான காரணங்கள்

சர்க்கரை நோயாளிகளில் மூன்றுபேரில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. இதனை டயாபடிக் நெப்ரோபதி அல்லது நீரிழிவு சிறுநீரகநோய்(DKD) என்று அழைக்கின்றனர். சர்க்கரை நோயாளிகளுக்கு கீழ்கண்ட காரணங்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகிறது.

1) அதிக ரத்த சர்க்கரை அளவு

2) உயர் ரத்த அழுத்தம் அல்லது ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் அளவு.

3) புகைப்பழக்கம் அல்லது மதுப்பழக்கம்.

4) உணவில் அதிக அளவு உப்பு சேர்த்துக்கொள்வது.

5) உடல் பருமன்.

6) கூடுதலாக உள்ள இருதயநோய் அல்லது மரபுரீதியான சிறுநீரக பாதிப்பு.

பொதுவாக சிறுநீரகத்தில் உள்ள குளோமருளி எனப்படும் நுண்குழாய்கள் ரத்தத்தில் உள்ள கழிவுகளை பில்டர் செய்கிறது. இதில் சிறிய துவாரங்கள் இருப்பதால் அதன் வழியாக கழிவுப்பொருட்கள் சிறுநீராக வெளியேற்றப்படுகிறது. ரத்தச் சர்க்கரை அளவு அல்லது ரத்தஅழுத்தம் அதிகரிக்கும்போது இந்த நுண்குழாய்களில் சேதத்தை ஏற்படுத்தி, துவாரங்களைப் பெரிதாக்கி சிறிய அளவிலான புரதத்தை வெளியேற்றுகின்றன (மைக்ரோஆல்புமினியூரியா).

டாக்டர் சத்தியநாராயணன்

டாக்டர் சத்தியநாராயணன்

மேலும் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது சிறிய ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு, சிறுநீரகத்தில் அழுத்தத்தை உண்டாக்கி, பில்டர்களின் திறனை இழக்கசெய்து, ரத்தத்தில் கழிவுபொருட்கள் குவிய வழிவகுக்கின்றன. இதனை பரிசோதனை செய்து கண்டறிய தாமதித்தாலோ அல்லது உதாசீனப்படுத்தினாலோ சிறுநீரக செயல்இழப்பு ஏற்படுகிறது. மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும் போது சிறுநீரகத்தில் உள்ள நெப்ரான்களில் அழற்சி அல்லது ஆக்ஸிடேட்டிவ்ஸ்டிரஸ் ஏற்பட்டு அதன் செயல்திறனை குறைக்கிறது. சிறுநீரக பாதிப்பு ஏற்படும் சர்க்கரை நோயாளிகள் அனைவருக்கும் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதில்லை. ரத்த சர்க்கரை அளவு, ரத்தகொதிப்பு, கொலஸ்ட்ரால் ஆகியவற்றை கட்டுக்குள் வைத்திருத்தல், ஆரோக்கியமான உணவுமுறைகளை பின்பற்றுதல், தினசரி உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்தல், உணவில் குறைந்த அளவு சோடியம் சேர்த்துக்கொள்ளுதல் ஆகியவற்றை பின்பற்றினால் சிறுநீரக பாதிப்பு மேலும் மோசமடைந்து சிறுநீரக செயலிழப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.

மாத்திரைகளால் பாதிப்பு

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளின் டோஸ் மற்றும் அதன் கால அளவை நோயாளிகள் சரியாக கடைப்பிடித்தால் சிறுநீரக பாதிப்பு பெரும்பாலும் ஏற்படுவதில்லை. மருத்துவர்களை கலந்தாலோசிக்காமல் மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி தாமாக சுய மருத்துவம் செய்து கொள்ளும் நபர்களுக்கு தான் சிறுநீரக பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மருந்துகளின் பக்க விளைவுகளால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பு ஆங்கிலத்தில் டி.ஐ .கே.டி (DIKD)- ட்ரக் இண்டியூஸ்டு கிட்னி டிசீஸ் என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களின் உடம்பில் மருந்துகளின் பக்க விளைவுகளால் பெரிதும் பாதிக்கப்படும் உறுப்புகளில் ஒன்றாக சிறுநீரகம் திகழ்கிறது. ஏனெனில், பெரும்பாலான மருந்துகள் மற்றும் அதன் வளர்ச்சிதை மாற்றுப் பொருட்கள் சிறுநீரகம் மூலமாக தான் வெளியேற்றப்படுகிறது.

அப்படி வெளியேற்றப்படும்போது அது சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். மேலும் சிறுநீரகத்திற்கு அதிக ரத்த ஓட்டம் இருப்பதால் நாம் உண்ணும் மருந்துகள் மற்றும் அதன் வளர்ச்சிதை மாற்ற பொருட்கள் சிறுநீரகத்தை அதிக அளவில் வந்து சேர்ந்தடைவதால், சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. மருத்துவமனையில் சேர்க்கப்படும் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளில் 20 சதவிகிதத்தினருக்கு மருந்துகளின் பக்க விளைவே காரணம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 60 வயதை கடந்தவர்கள், ஏற்கனவே சிறுநீரக பாதிப்புள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், இருதய செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு, எலக்ரோலைட் சமநிலையின்மை மற்றும் செப்சிஸ் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு மருந்துகளின் பக்கவிளைவுகளினால் சிறுநீரக பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம். கீழ்க்கண்ட மருந்துகள் சிறுநீரக பாதிப்பை அதிகம் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டிருக்கின்றன.

1) வலி நிவாரணி மருந்துகள் (அசிட்டமினோபென், NSAID)

2) மனநல பிரச்சனைகளுக்காக பரிந்துரைக்கப்படும் மருந்துகள் (அமிட்டிரிப்டலின், லித்தியம், பென்சோடயசிப்பின்ஸ்)

3) ஒவ்வாமைக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகள்(டைபென்ஹைட்ரமின்)

4) நுண்ணுயிர் எதிர்ப்பிகள், அமினோகிளைகோசைட்ஸ், பெனிசிலின், செப்பலோஸ்போரின்ஸ், ஏசைக்லோவிர், சல்போனாமைட்ஸ்.

5) இருதய நோய்க்காக பரிந்துரைக்கப்படும் ஏ.சி.இ இன்ஹிபிட்டர்ஸ் மற்றும் ஏ,ஆர், பி, குளோபிட்ரோகல், ஸ்டாட்டின்ஸ்.

6) புற்றுநோய் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படும் சிஸ்ப்ளேட்டின், மெத்தோடிரெக்சேட், மிட்டோமைசின்.

7) புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்ஸ்- ஓமிப்ரசோல், பாண்டோப்ரசோல்.

மருந்துகளின் பக்க விளைவால் குளோமருலோநெப்ரைட்டிஸ், இண்டெர்ஸ்டிட்டியல் நெப்ரைட்டிஸ், ராப்டோமையோலைசிஸ், டியுபுலர் செல் டாக்ஸிசிட்டி போன்ற சிறுநீரக பாதிப்புகள் ஏற்படலாம். ஆகையால் நீங்கள் எந்த ஒரு மருந்தை உட்கொள்வதற்கு முன்னர் மருத்துவரை கலந்து ஆலோசித்து தற்போதைய சிறுநீரக செயல்பாடுகள் குறித்து பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் மருந்துகளை உட்கொள்ளும் போதும், அதன் டோசேஜை அதிகபடுத்தும் போதும் சிறுநீரக செயல்பாடு தொடர்ந்து கண்காணிக்கபட வேண்டும்.பொதுவாக மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் அந்த மருந்தை உட்கொள்வதை நிறுத்திய பின் மீண்டும் சிறுநீரக செயல்பாடு பழைய நிலைக்கு திரும்பும். ஆகையால் நீங்கள் எந்த ஒரு நோய்க்கும் மருந்தை உட்கொள்வதற்கு முன்னர் மருத்துவரை கலந்தாலோசித்து அவர் பரிந்துரைக்கும் மருந்து மற்றும் டோசேஜை பின்பற்றினால் சிறுநீரக பாதிப்பு ஏற்படாது.

மேலும் செய்திகள்