ஆரோக்யம்
உடம்பெல்லாம் ஒரே வலியா.. எலும்புகள் பலவீனமா..? அலட்சியம் வேண்டாம்
ஆரோக்யம்

உடம்பெல்லாம் ஒரே வலியா.. எலும்புகள் பலவீனமா..? அலட்சியம் வேண்டாம்

தினத்தந்தி
|
11 Jan 2025 6:00 AM IST

சூரிய ஒளியில் வைட்டமின் டி கிடைக்கும் என்று சொன்னவுடன், அரைகுறை ஆடையுடன் நாள் முழுக்க சூரிய ஒளியில் நிற்கக்கூடாது.

சிலர் எப்போதும் உடம்பெல்லாம் வலிப்பதாக கூறுவார்கள். எலும்புகளும் வலுவிழந்ததுபோன்ற உணர்வு ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் அதற்கான தீர்வுகளை கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

உடலெல்லாம் வலி , எலும்புகள் ஸ்ட்ராங்காக இல்லை என்றாலே, வைட்டமின் டி சத்துக் குறைபாடு இருக்க அதிக வாய்ப்புண்டு. நமது உடலுக்கு A, B, C, D என்று ஆங்கில எழுத்து வரிசையில் வைட்டமின்கள் தினந்தோறும் தேவைப்படுகின்றன. இதில் வைட்டமின் டி என்பது , உடலின் ஆரோக்கியத்துக்கு மிகவும் தேவையான ஒரு ஊட்டச்சத்து ஆகும். இந்த டி சத்து, நமது உடலிலுள்ள எலும்புகளுக்கு மிக உறுதியையும், மிகுந்த பலத்தையும் கொடுக்க மிகமிக உதவியாய் இருக்கிறது.

ஒரு கட்டிடத்தின் பலத்துக்கு எப்படி இரும்புக்கம்பியும், சிமெண்டும் முக்கியமோ, அதுபோல நமது உடலின் பலத்துக்கு கால்சியமும், பாஸ்பரஸ்சும் மிகமிக முக்கியம். நமது உடலிலுள்ள எலும்புகளுக்கும் பற்களுக்கும் மிகமிக தேவையான கால்சியத்தையும் , பாஸ்பரசையும் நாம் சாப்பிடும் உணவிலிருந்து உறிஞ்சி, இழுத்தெடுத்து, உடலில் சேகரித்து வைக்க வைட்டமின் டி மிகமிக உபயோகமாக இருக்கிறது.

உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை, வைட்டமின் டி குறைக்கிறது. நோய்த்தொற்றை அதிகமாக்கவிடாமல் , குறைக்க உதவி செய்கிறது. உடலில் ஆங்காங்கே ஏற்படும் கட்டி, வீக்கம் , ரணம் முதலியவற்றைக் குறைக்க உதவி செய்கிறது. எலும்புகளை உறுதியாக்குகிறது. உடலில் எதிர்ப்புச்சக்தியை அதிகமாக்க உதவி செய்கிறது. உடல் தசைகளை உறுதியாக்க உதவுகிறது. பற்கள் உறுதியாக இருக்க உதவி செய்கிறது.

மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க உதவி செய்கிறது. தசை இறுக்கம், தசைப்பிடிப்பு ஏற்படாமலிருக்க உதவி செய்கிறது. நரம்புகள் நன்றாக இயங்க உதவி செய்கிறது. உங்கள் உடலுக்குள் , தெரியாமல் நுழையும் பாக்டீரியா மற்றும் வைரஸ் நச்சுக் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவி செய்கிறது. இவ்வாறாக, வைட்டமின் டி சத்து நமது உடலுக்கு செய்யும் உதவி ஏராளம், ஏராளம்.

ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவைப்படும் வைட்டமின் டி-யின் அளவுகள் என்ன தெரியுமா? 1 வயதிலிருந்து 70 வயது வரை உள்ளவர்களுக்கு சுமார் 600 யூனிட்டும் , 70 வயதுக்கு மேல் உள்ள வயதானோருக்கு சுமார் 800 யூனிட்டும், கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு 600 யூனிட்டும், வைட்டமின் டி சத்து தேவைப்படுகிறது.

மிகவும் குறைவான உணவுப் பொருட்களிலேயே வைட்டமின் டி சத்து இருக்கிறது. மேலை நாடுகளில் பால் மற்றும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களில் , ஒரு டம்ளருக்கு சுமார் 120 யூனிட் வைட்டமின் டி சத்து சேர்க்கப்பட்டு, செறிவூட்டப்பட்டு பொதுமக்களுக்குக் கிடைக்கிறது. சோயா பால், பாதாம் பால் , ஓட்ஸ் கஞ்சி, முட்டை மஞ்சள் கரு, பாலாடைக்கட்டி, காளான்கள், ஆரஞ்சுப் பழச்சாறு, ஆழ்கடலில் வசிக்கும் காட் வகை மீன்களின் ஈரல், ஆகியவைகளில் வைட்டமின் டி சத்து அடங்கியிருக்கிறது.

இவையெல்லாவற்றையும் விட, எந்தச் செலவும் இல்லாமல் இயற்கையாக, நமக்கு வைட்டமின் டி சத்து நம் கண் முன்னேயே இருக்கிறது. கிடைக்கிறது. அது என்ன தெரியுமா? அதுதான் சூரிய ஒளி. இந்த இயற்கையான சூரிய ஒளி கிடைக்காததினால் தான் , பல நாடுகளிலுள்ள மேலை நாட்டவர்கள், இந்தியாவை நோக்கி, குறிப்பாக தென்னிந்தியாவை நோக்கி, சூரியக் குளியல் குளிக்க அதிக அளவில் வருகிறார்கள்.

சுமார் 5000 லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக, பூமி தோன்றிய காலத்திலிருந்தே உயிர் வாழ்வன அனைத்துக்கும் சூரியஒளி மூலம் வைட்டமின் டி சத்து கிடைத்துவருகிறது. சூரிய கதிர்கள் நமது உடலின் மீது படும்போது, நமது உடல் தோலிலுள்ள 7 டிஹைட்ரோ கொலஸ்ட்ரால் என்னும் பொருள் , சூரிய ஒளியிலுள்ள புறஊதா பி கதிர்களை உள்ளிழுத்து, வைட்டமின் டி3 யின் முதல் பகுதியாக மாறுகிறது. பின்னர் வைட்டமின் டி3 யாக மாற்றப்பட்டு, உடலுக்கு உபயோகமாகிறது.

சூரிய ஒளியில் தான் வைட்டமின் டி கிடைக்கும் என்று சொன்னவுடன், அரைகுறை ஆடையுடன் நாள் முழுக்க சூரிய ஒளியில் நிற்கக்கூடாது. நேரடி சூரிய வெளிச்சம் உடலில் அதிகம் பட்டால், தோல் சுருக்கம் , வெகு சீக்கிரத்தில் முதுமை தோற்றம், தோல் புற்றுநோய் முதலியவை உண்டாக வாய்ப்புண்டு. தினமும் காலை, மாலை சுமார் 15 நிமிடங்கள் சூரிய ஒளி படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கண்ணாடி ஜன்னலுக்கு உள்ளே நின்று கொண்டு, சூரிய ஒளி என் உடம்பில் படுகிறது, இதுபோதும் எனக்கு என்று நினைப்பது சரியல்ல. நேரடி சூரிய ஒளி உங்கள் தோல் மீது பட வேண்டும்.

உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இல்லையென்றால், உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்ஸின் அளவும் குறைந்துவிடும். இதனால் , உடல் எலும்புகள் மிகவும் அடர்த்தியாக, மிகவும் உறுதியாக இல்லாமல் , நனைந்து போன பேப்பரைப் போல் எலும்புகள் வளைந்துவிடும், உடைந்துவிடும். கையால் சற்று வேகமாக தட்டினாலே, எலும்பு உடைந்துவிடும். வைட்டமின் டி குறைபாட்டினால் எலும்பில் ஏற்படும் இந்த நோய்க்கு ஆஸ்டியோபோரோஸிஸ் அதாவது எலும்புப் புரை என்று சொல்லப்படுகின்றது. இந்த நோய் ஏற்படாமலிருக்க வைட்டமின் டி யுடன் கால்சியமும் சேர்ந்து, எலும்பைப் பாதுகாக்கிறது.

தாய்ப்பாலில் வைட்டமின் டி சத்து அதிகமாக இல்லை. வயதானவர்களுக்கு சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி யை இழுக்க தோலுக்கு சக்தி இல்லை. அதிக கறுப்பு நிற தோல் உடையவர்களுக்கு வைட்டமின் டி முழுவதுமாக கிடைக்க முடிவதில்லை. தீராத வயிற்றுப் பிரச்சினை உள்ளவர்களுக்கு உணவின் மூலம் கிடைக்கும் வைட்டமின் டி யை நன்கு உறிஞ்ச வாய்ப்பில்லை. கல்லீரல், சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்களுக்கு, வைட்டமின் டி உறிஞ்ச அதிக வாய்ப்பில்லை. குழந்தைகளுக்கு வைட்டமின் டி பற்றாக்குறை, ச்ரிக்கெட்ஸ்ஞ் என்கிற நோயை உண்டு பண்ணுகிறது. இது இந்தியாவை, மற்ற நாடுகளில் அதிகம்.

எனவே, வைட்டமின் டி சத்து அதிகமுள்ள உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்வது சிறந்த பலனை தரும். தினமும் ஏதாவதொரு வேலையை வைத்துக் கொண்டு இலவசமாகக் கிடைக்கும் சூரிய ஒளியில் சற்று நேரம் நில்லுங்கள். ஆரோக்கியமாக, பலமாக வாழுங்கள்.

மேலும் செய்திகள்