உலக கோப்பை கால்பந்து: கத்தாரை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ஈகுவடார்
|ஈகுவடார் அணி தரப்பில் என்னர் வலென்சியா 2 கோல்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
தோகா,
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. தொடக்க நாளான இன்று 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள போட்டியை நடத்தும் கத்தார்-ஈகுவடார் அணிகள் மோதின.
இதில் ஆரம்பம் முதலே அதிரடி தாகுதலை தொடுத்த ஈகுவடார் அணி அபாரமாக ஆடியது. அந்த அணிக்கு ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை என்னர் வலென்சியா கோலாக்கினார். இதனால் ஈகுவடார் அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இதையடுத்து 31 வது நிமிடத்தில் வலென்சியா மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் அந்த அணி முதல் பாதி ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டாலும் இறுதியில் கோல அடிக்க இயலவில்லை. இதனால் இரண்டாம் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. இறுதியில் ஈகுவடார் அணி முதல் பாதியில் அடித்த இரண்டு கோல்களின் அடிப்படையில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.