உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதியில் போர்ச்சுகலை சமாளிக்குமா மொராக்கோ...?
|உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதியில் இன்று இரவு 8.30 மணிக்கு போர்ச்சுகல்-மொராகோ அணிகள் மோதுகின்றன.
தோகா,
போர்ச்சுகல் அணி லீக் சுற்றில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் தனது பிரிவில் முதலிடம் பெற்றது. 2-வது ரவுண்டில் 6-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை துவம்சம் செய்தது. முந்தைய ஆட்டத்தில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால் டோவை தொடக்க லெவன் வீரர்களில் ஒருவராக களம் இறக்காதது விமர்சனத்திற்குள்ளானது. ஆட்ட யுக்தியின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ் விளக்கம் அளித்தார்.
ஆனாலும் ரொனால்டோ அணியை விட்டு வெளியேறப்போவதாக தகவல்கள் கசிந்தன. அதில் உண்மை இல்லை. அவர் அவ்வாறு எதுவும் கூறவில்லை என்று சான்டோஸ் மறுத்தார். அவருக்கு பதிலாக களம் கண்ட கோன்கலோ ரமோஸ் 'ஹாட்ரிக் கோல் அடித்ததால் இன்றைய ஆட்டத்தில் ரொனால்டோ தொடக்கத்திலேயே இடம் பெறுவாரா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாகும்.
ஆப்பிரிக்க அணியான மொராக்கோ லீக் சுற்றில் 2-ல் வெற்றியும், ஒன்றில் 'டிரா'வும் கண்டது. 2-வது ரவுண்டில் மொராக்கோ அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் ஸ்பெயினுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக கால்இறுதியை எட்டியது. கோல் கீப்பர் யாசின் போனோ ஹீரோவாக ஜொலித்தார்.
இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடினால் உலகக் கோப்பையில் அரைஇறுதியை எட்டும் முதல் ஆப்பிரிக்க அணி என்ற வரலாற்று சாதனையை படைத்து விடும். ஆனால் பலம் வாய்ந்த போர்ச்சுகலை சமாளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.