< Back
உலக கோப்பை கால்பந்து - 2022
உலகக்கோப்பை கால்பந்து: நடப்பு சாம்பியனுக்கு முட்டுக்கட்டை போடுமா இங்கிலாந்து? - காலிறுதியில் பிரான்சுடன் மோதல்
உலக கோப்பை கால்பந்து - 2022

உலகக்கோப்பை கால்பந்து: நடப்பு சாம்பியனுக்கு முட்டுக்கட்டை போடுமா இங்கிலாந்து? - காலிறுதியில் பிரான்சுடன் மோதல்

தினத்தந்தி
|
10 Dec 2022 6:37 AM IST

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதியில் நள்ளிரவு 12.30 மணிக்கு இங்கிலாந்து-பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

தோகா,

நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி லீக் சுற்றில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்தது. 2-வது சுற்றில் 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தை விரட்டியது. சூப்பர்பார்மில் உள்ள அந்த அணியில் கிலியன் எம்பாப்பே (5 கோல்), ஒலிவியர் ஜிரூட் (3 கோல்), கிரிஸ்மான் ஆகியோர் தூண்களாக உள்ளனர். குறிப்பாக சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் கோல் போடுவதில் கில்லா டியான எம்பாப்பேவின் மின்னல்வேக ஊடுருவலை கட்டுப்படுத்த தவறினால் இங்கிலாந்து பாடு திண்டாட்டம் தான்.

தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணிகளில் ஒன்றான இங்கிலாந்து லீக் சுற்றில் (2 வெற்றி, ஒரு டிரா) தோல்வி பக்கமே செல்லவில்லை. 2-வது சுற்றில் 3-0 என்ற கோல் கணக்கில் செனகலை தோற்கடித்தது. ஹாரி கேன், பெலிங்காம், புகாயோ சகா (3 கோல்), மார்கஸ் ராஷ்போர்டு (3 கோல்) பில் போடென், மேகரே ஆகியோர் அந்த அணியில் சிறப்பாக ஆடுகிறார்கள்.

பிரான்ஸ் கேப்டனும், கோல் கீப்பருமான லோரிஸ், இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் இருவரும் இங்கிலாந்தில் உள்ள டோட்டன்ஹாம் ஹாட்ஸ்புர் கிளப்புக்காக நீண்ட காலமாக இணைந்து விளையாடுகிறார்கள்.

அதனால் இருவரது பலம் பலவீனம் அவர்களுக்கு நன்றாக தெரியும். அது இன்றைய மோதலில் எதிரொலிக்குமா? பிரான்சின் தாக்குதல் வியூகத்துக்கு இங்கிலாந்து முட்டுக்கட்டை போடுமா? என்பதே ரசிகர்களின் பேராவலாகும்.

மேலும் செய்திகள்