< Back
உலக கோப்பை கால்பந்து - 2022
உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டி: அர்ஜெண்டினா- குரேஷியா அணிகள் நாளை மோதல்
உலக கோப்பை கால்பந்து - 2022

உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டி: அர்ஜெண்டினா- குரேஷியா அணிகள் நாளை மோதல்

தினத்தந்தி
|
12 Dec 2022 6:58 PM IST

நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு முதல் அரை இறுதி ஆட்டம் லுசைல் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

லுசைல்,

கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. 2 நாள் ஓய்வுக்கு பிறகு அரைஇறுதி போட்டி நாளை (13-ந்தேதி) தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் பிரான்ஸ் , 2 முறை உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா, கடந்த முறை 2-வது இடத்தை பிடித்த குரோஷியா , ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த மொராக்கோ ஆகிய 4 நாடுகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு முதல் அரை இறுதி ஆட்டம் லுசைல் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் அர்ஜென்டினா- குரோஷியா அணிகள் மோதுகின்றன. லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி லீக் சுற்றில் முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. அதைத் தொடர்ந்து மெக்சிகோவை 2-0 என்ற கணக்கிலும், போலந்தை 2-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது. 2-வது சுற்றில் ஆஸ்திரேலியாவை. 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.

அர்ஜென்டினா கால் இறுதியில் நெதர்லாந்தை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது. அந்த அணி 9 கோல் போட்டுள்ளது. 5 கோல் வாங்கியுள்ளது. உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா 6-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அரைஇறுதியில் அந்த அணி தோற்றது கிடையாது.

குரோஷியா பலம் வாய்ந்தது. அந்த அணியை சமாளிப்பது அர்ஜென்டினாவுக்கு சவாலானது. முன்களத்தில் வலுவாக இருக்கும் அந்த அணி பினகளத்தில் பலவீனமாக காணப்படுகிறது. நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இதை காண முடிந்தது. கடைசி நிமிடங்களில் 2 கோல் வாங்கி இருந்தது. இதனால் பின் களத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நட்சத்திர வீரர் மெஸ்சி தான் அர்ஜென்டினாவின் பலம். அவர் 4 கோல்கள் அடித்துள்ளார். முக்கியமான அரைஇறுதியில் அவர் வீரர்களை ஒருங்கிணைப்பது அவசியமானதாகும். ஜூலியன் அல்வாரெஸ், என்சோ பெர்னாண்டஸ் , மார்டினஸ் , மொலினா போன்ற முன்னணி வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.

கோல்கீப்பர் மார்ட்டினஸ் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். நடுகள வீரர் அகுனா மஞ்சள் அட்டை பெற்றதால் இந்த ஆட்டத்தில் விளையாட முடியாது. உலக தர வரிசையில் 12-வது இடத்தில் உள்ள குரோஷியா இந்த தொடரில் தோல்வி எதையும் சந்திக்கவில்லை. அந்த அணி கனடாவை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. மொராக்கோ, பெல்ஜியத்துடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. 2-வது சுற்றில் ஜப்பானையும் , கால் இறுதியில் பிரேசிலையும் பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது.

அந்த அணி 6 கோல் போட்டுள்ளது. 3கோல் வாங்கியுள்ளது. சிறந்த வீரர்களை கொண்ட குரோஷியா தொடர்ந்து 2-வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு நுழையும் வேட்கையில் உள்ளது. 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த உலக கோப்பையில் அந்த அணி அரைஇறுதியில் இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது. இறுதிப் போட்டியில் பிரான்சிடம் தோற்று கோப்பையை இழந்தது.

குரோஷியா அணியில் கேப்டன் மாட்ரிச் , கிராமரிச், பெரிசிச் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். நடுகளம், பின்களத்தில் அந்த அணி மிகவும் வலுவாக இருக்கிறது. இரு அணிகளும் 5 முறை மோதியுள்ளன. அர்ஜென்டினா 2 ஆட்டத்திலும், குரோஷியா 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிரா ஆனது. உலக கோப்பையில் மோதிய 2 போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன.

1998 உலக கோப்பையில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கிலும் , கடந்த உலக கோப்பையில் குரோஷியா 3-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றன. இதற்கு அர்ஜென்டினா நாளை பழிவாங்குமா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அர்ஜென்டினாவும், குரோஷியாவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. நாளை மறுநாள் (14-ந் தேதி) நடைபெறும் 2-வது அரைஇறுதியில் பிரான்ஸ்-மொராக்கோ அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்