உலகக்கோப்பை கால்பந்து: வேல்ஸ் அணியை வீழ்த்தியது ஈரான்..!
|இன்று நடைபெற்ற போட்டியில் ஈரான் அணி 2-0 என்ற கோல் கணக்கில்ல வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
தோகா,
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ந் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று குரூப் பி- ல் நடைபெற்ற போட்டியில் வேல்ஸ்-ஈரான் அணிகள் மோதின.
இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் வழக்கமான ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் ஈரான் அணி சார்பில் ரூஸ்பே ஜேஸ்மி 90+8-வது நிமிடத்திலும் ராமின் ரசீன் 90-11-வது நிமிடத்திலும் என அடுத்தடுத்து கோல் அடித்தனர்.
இதையடுத்து ஆட்டநேர முடிவில் ஈரான் அணி 2-0 என்ற கோல் கணக்கில்ல வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ஈரான் அணி குரூப் பி புள்ளிப் பட்டியலில் 3 புள்ளிகளுடன் (1 வெற்றி, 1 தோல்வி) 2-வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து 6.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் கத்தார்- செனகல் அணிகள் மோதுகின்றன.