< Back
உலக கோப்பை கால்பந்து - 2022
உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு யாருக்கு...?

Image Courtesy : AFP 

உலக கோப்பை கால்பந்து - 2022

உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு யாருக்கு...?

தினத்தந்தி
|
20 Nov 2022 3:24 AM IST

உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பதை பார்ப்போம்.

தோகா,

ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழா எதுவென்றால் அது உலக கோப்பை கால்பந்து போட்டி தான். 4 ஆண்டுக்கு ஒரு முறை அரங்கேறும் இந்த போட்டிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. சொந்த நாட்டு அணி தகுதி பெறாவிட்டாலும் கூட தங்களுக்கு பிடித்தமான வீரர்களின் ஆட்டத்தை காண தவம் கிடப்பார்கள்.

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 18-ந்தேதி வரை நடக்கிறது. புதிய ஸ்டேடியம் கட்டுதல் முதல் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் வரை கத்தார் அரசு ஏறக்குறைய ரூ.17 லட்சம் கோடி பணத்தை தண்ணியாக செலவிட்டுள்ளது.

வழக்கமாக உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன்-ஜூலை மாதங்களில் நடைபெறும். ஆனால் கத்தாரில் அந்த சமயத்தில் 40 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் சுட்டெரிக்கும். அத்தகைய சூழலில் விளையாடுவது ஆபத்தானது. அதனால் தான் வரலாற்றில் அதிசய நிகழ்வாக உலக கோப்பை கால்பந்து போட்டி முதல்முறையாக குளிர்காலத்தில் நடத்தப்படுகிறது. அதற்கு ஏற்ப போட்டியில் களம் காணும் 32 அணிகளும் இறுதிகட்ட ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இந்த உலக கோப்பையை வெல்வதற்கு யாருக்கு அதிக வாய்ப்பு என்பதை பார்க்கலாம்.

பிரேசில்: உலக தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடம் வகிக்கும் 5 முறை சாம்பியனான பிரேசிலுக்கு தான் இந்த முறை மகுடம் சூடுவதற்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ராய்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பிலும் கால்பந்து கலாசாரத்துடன் பின்னிபிணைந்துள்ள பிரேசிலே முந்துகிறது.

உலக கோப்பைக்கான தகுதி சுற்றில் தோல்வியே சந்திக்காத (17 ஆட்டத்தில் 14-ல் வெற்றி, 3-ல் டிரா) பிரேசில் சரியான கலவையுடன் மிகவும் பலம் பொருந்திய அணியாக உருவெடுத்துள்ளது. அலிசன் (லிவர்பூல் கிளப்புக்காக ஆடுகிறார்), எடெர்சன் (மான்செஸ்டர் சிட்டி) ஆகிய உலகின் வலுவான இரண்டு கோல் கீப்பர்களை கொண்டுள்ளது. துடிப்புமிக்க ஆட்டக்காரர் நெய்மார் நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வருகிறார்.

பிரேசில் அணிக்காக 75 கோல்கள் அடித்துள்ள நெய்மார், இந்த முறை பிரேசிலை உச்சத்துக்கு கொண்டு செல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இவரோடு கேஸ்மிரோ, ராபினோ, வினிசியஸ் ஜூனியர், தியாகோ சில்வா, ரிச்சர்லிசன், லூகாஸ் பாக்கெட்டா போன்ற வீரர்களும் அசத்தினால் போதும். தற்காப்பு ஆட்டத்தில் சற்று பலவீனமாக இருப்பது போல் தோன்றினாலும் தாக்குதல் பாணியில் அதை சரிகட்டி விடுவார்கள்.

தனிப்பட்ட வீரரை குறிப்பாக நெய்மாரையே அதிகம் சார்ந்து இருந்தால் என்ன நடக்கும் என்பதை 2014 மற்றும் 2018-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இருந்து பாடம் கற்று இருப்பார்கள். அதனால் பயிற்சியாளர் டைட் அணிக்கு இளம் ரத்தத்தை பாய்ச்சியுள்ளார். 2016-ம் ஆண்டில் இருந்து பயிற்சியாளர் பணியை கவனிக்கும் டைட் இளமையும், அனுபவமும் கலந்த சூப்பரான ஒரு அணியை உருவாக்கி இருக்கிறார். 'அட்டாக்கிங்' பகுதிக்கு மட்டும் 9 நட்சத்திர வீரர்கள் இருக்கிறார்கள். இதில் யாரை தேர்வு செய்வது என்பது தான் பயிற்சியாளருக்கு தலைவலியாக இருக்கும்.

லீக் சுற்றை தாண்டுவதில் பிரேசிலுக்கு சிக்கல் இருக்காது. நாக்-அவுட் சுற்றுகளில் ஒரு அணியாக விளையாடினால் நிச்சயம் பிரேசில் 6-வது முறையாக உலக கோப்பையை வெல்லலாம்.

கடைசியாக 2002-ம் ஆண்டு ஆசிய நாடுகளான ஜப்பான்-தென் கொரியா நடத்திய உலக கோப்பையை பிரேசில் வென்றிருந்தது. இப்போது மற்றொரு ஆசிய நாட்டில் நடக்கும் போட்டியின் மூலம் தங்களது 20 ஆண்டு கால ஏக்கத்தை தணிக்கும் வேட்கையில் உள்ளது.

பிரான்ஸ்: நடப்பு சாம்பியன் கோப்பையை தக்கவைத்துக் கொள்ள பிரான்சும் வரிந்து கட்டுகிறது. 2018-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்ற வீரர்களில் 10 பேர் நீடிக்கிறார்கள். ஆனால் இந்த 4 ஆண்டு கால இடைவெளியில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ள பிரான்சுக்கு உலகின் மிகச்சிறந்த ஆட்டக்காரர்களாக திகழும் கரீம் பென்ஜிமா, கிலியன் எம்பாப்வே தூண்களாக உள்ளனர்.

23 வயதான எம்பாப்வே கடந்த உலக கோப்பையில் 4 கோல்களை அடித்து பிரமிக்க வைத்தார். கரீம் பென்ஜிமா ரியல் மாட்ரிட் கிளப்பின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். இவர்களின் கைவரிசையை பொறுத்தே பிரான்சின் கோல்ஜாலம் அமையும். என்கோலோ கான்டே, பால் போக்பா ஆகிய முன்னணி வீரர்கள் காயத்தால் ஜகா வாங்கியது பின்னடைவு என்பதில் மாற்று கருத்து கிடையாது. அதனால் கடைசி நேரத்தில் அணியில் மாற்றம் செய்ய வேண்டியதாகி விட்டது.

அர்ஜென்டினா: 18-வது முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ள அர்ஜென்டினா கடைசியாக விளையாடிய 36 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போடுவது கவனிக்கத்தக்க ஒன்று. அர்ஜென்டினா அணி என்றாலே லயோனல் மெஸ்சியின் பெயர் தான் சட்டென்று நினைவுக்கு வரும். சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் லாவகமாக பந்தை வலைக்குள் தள்ளி விடும் அசாத்திய திறமைசாலியான 35 வயதான மெஸ்சி தங்கள் அணிக்காக இதுவரை 91 கோல்கள் அடித்துள்ளார்.

2014-ம் ஆண்டு இறுதி சுற்றில் தோல்வியை தழுவிய மெஸ்சிக்கு உலக கோப்பையை கையில் ஏந்துவதற்கு இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும். ஒருங்கிணைந்து விளையாடும்பட்சத்தில் அர்ஜென்டினா எதிரணிகளை நடுங்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. மெஸ்சியோடு, ஏஞ்சல் டி மரியா, லாட்ரோ மார்ட்டினஸ் ஆகியோரும் கோல் போடுவதில் கில்லாடிகள். இந்த கூட்டணி ஒரு சேர 'கிளிக்' ஆகி விட்டால் அர்ஜென்டினாவுக்கு 3-வது முறையாக மகுடம் ஏந்தும் தூரம் வெகுதொலைவில் இருக்காது.

ஜெர்மனி: ஆக்ரோஷமான ஆட்டத்துக்கு பெயர் போன ஜெர்மனி மீது இந்த தடவை எதிர்பார்ப்பு கொஞ்சம் குறைவு தான். 4 முறை சாம்பியனான ஜெர்மனி கடந்த ஆண்டு லீக் சுற்றுடன் மண்ணை கவ்வியது. 2020-ம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பிலும் ஜொலிக்கவில்லை. புதிய பயிற்சியாளர் ஹன்சி பிளிக் வந்த பிறகு ஓரளவு முன்னேற்றம் கண்டு வருகிறது.

அந்த அணியில் கோல் கீப்பர் மானுவல் நீயர், ஹாவெட்ஸ், தாமஸ் முல்லர், மரியா கோட்ஸி, ஜோசுவா கிமிச், சார்ஜ் நாப்ரி, லியான் கோர்ட்ஸ்கா உள்ளிட்டோர் அனுபவ சாலிகள். 18 வயதான யோசோபா மோகோகோ, 19 வயதான ஜமால் முசியாலா ஆகிய இளம் புயல்களும் இருக்கிறார்கள். ஆனால் தற்காப்பு ஆட்டத்தில் ஜெர்மனியிடம் தடுமாற்றம் தெரிகிறது. குறிப்பாக மத்திய நடுகளத்தை பாதுகாக்க கச்சிதமான வீரர் இல்லை. இந்த குறைகளை சரிசெய்வதை பொறுத்தே ஜெர்மனியின் வெற்றி வாய்ப்பு அமையும்.

ஹாரி கேன் தலைமையிலான இங்கிலாந்து, உலகின் 2-ம் நிலை அணியான பெல்ஜியம், முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் ஆகிய அணிகளையும் வாய்ப்பில் இருந்து ஓரங்கட்டிவிட முடியாது. போர்ச்சுகலை பொறுத்தவரை கிறிஸ்டியானா ரொனால்டோவை மட்டுமே மலைபோல் நம்பி இருக்கிறது.

இதுவரை உலக கோப்பையில் இறுதி சுற்றுக்கு கூட முன்னேறாத போர்ச்சுகல் எந்த அளவுக்கு எழுச்சி பெறும் என்பது கேள்விக்குறி தான். 4 முறை சாம்பியனான இத்தாலி தொடர்ந்து 2-வது முறையாக தகுதி பெற முடியாமல் போனது பிரதான அணிகளுக்கு நிம்மதியாக இருக்கும்.

அதே சமயம் நெதர்லாந்து, குரோஷியா, செனகல், சுவிட்சர்லாந்து, மெக்சிகோ, டென்மார்க் போன்ற அணிகள் அதிர்ச்சி வைத்தியம் அளிக்க கங்கணம் கட்டி நிற்கின்றன. எனவே இந்த கால்பந்து யுத்தத்தில் முடிவுகளை அவ்வளவு எளிதில் கணித்து விட முடியாது. அரியணையில் அமரப்போவது யார்? என்பதை அறிய டிசம்பர் 18-ந்தேதி வரை காத்திருப்பதே சாலப்பொருத்தமாக இருக்கும்.

மொத்தம் 64 ஆட்டங்கள்.... இனி ஒரு மாதத்திற்கு... மைதானத்தில் மட்டும் பந்து துள்ளப் போவதில்லை... ரசிகர்களின் மனதிலும் தான்...

Related Tags :
மேலும் செய்திகள்