< Back
உலக செய்திகள்
பலாத்கார வழக்கில் விடுவிக்கப்பட்ட பாதிரியார் பிராங்கோ முலக்கல் பதவி விலகலுக்கு வாடிகன் ஒப்புதல்
உலக செய்திகள்

பலாத்கார வழக்கில் விடுவிக்கப்பட்ட பாதிரியார் பிராங்கோ முலக்கல் பதவி விலகலுக்கு வாடிகன் ஒப்புதல்

தினத்தந்தி
|
1 Jun 2023 7:54 PM IST

கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பாதிரியார் பிராங்கோ முலக்கல் பதவி விலகலுக்கு வாடிகன் ஒப்புதல் அளித்து உள்ளது.

வாடிகன் நகரம்,

இந்தியாவில், ஜலந்தர் மறைமாவட்ட பிஷப்பாக இருந்த பிராங்கோ முலக்கல்லின் பதவி விலகலை போப் பிரான்சிஸ் ஏற்று கொண்டு உள்ளார். கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில், அவர் கேரள விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து விடுவிக்கப்பட்டார்.

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள மிஷனரிஸ் ஆப் ஜீசஸ் சபையை சேர்ந்த கன்னியாஸ்திரி, ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறைமாவட்ட பிஷப்பாக இருந்த பிராங்கோ மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு கூறினார்.

2014 மற்றும் 2016 ஆண்டுகளுக்கு இடையில் கேரளாவிற்கு பயணம் செய்தபோது அவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து பிராங்கோ முலக்கல் ஜலந்தர் மறைமாவட்ட பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

பிஷப் பிராங்கோ முலக்கல் மீது 2018-ம் ஆண்டில் கோட்டயம் மாவட்ட போலீசாரால் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதே ஆண்டு செப்டம்பர் 21 அன்று அவர் கைது செய்யப்பட்டார்.

வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு, கற்பழிப்பு, இயற்கைக்கு மாறான பாலியல் மற்றும் கிரிமினல் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில், பிராங்கோ முலக்கல் அக்டோபர் 16, 2018 அன்று ஜாமீன் பெற்றார். இந்த வழக்கு கோட்டயம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நவம்பர் 2019-ல் தொடங்கியது.

இந்த வழக்கில் பாதிரியார்கள் மற்றும் 22 கன்னியாஸ்திரிகள் உள்பட 83 சாட்சிகள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 83 சாட்சிகளில் 39 பேர் அழைக்கப்பட்டு அவர்கள் விசாரிக்கப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான சாட்சியங்களை அரசு தரப்பு நிரூபிக்க தவறி விட்டது என கூறி, அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் பிராங்கோ முலக்கல் விடுவிக்கப்படுகிறார் என நீதிபதி கூறினார். தீர்ப்பை கேட்டதும் பிராங்கோ முலக்கல் கண்ணீர் விட்டார்.

பிராங்கோ பதவி விலகல் விவகாரத்தில், அவர் எமெரிட்டஸ் பிஷப்பாக இனி செயல்படுவார். ஜலந்தர் பிஷப் பதவியில் இருந்து விலகுவது அவரது சொந்த முடிவு என்றும், அவரது பதவி விலகல், அவருக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை இல்லை என்றும் போப் பிரான்சிஸ் பிரதிநிதியான இந்திய அப்போஸ்தலர் சபை தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்