உலகக்கோப்பை கால்பந்து: நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியை வீழ்த்தியது துனிசியா..!!
|உலகக் கோப்பை கால்பந்தில் கடைசி லீக்கில் பிரான்சை வென்ற திருப்தியோடு துனிசியா வெளியேறியது.
தோகா,
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று 'டி' பிரிவில் ஒரே நேரத்தில் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் நடந்தன.
இதில் அல்ரையானில் உள்ள எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி, துனிசியாவை எதிர்கொண்டது. ஏற்கனவே 2-வது சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் பிரான்ஸ் அணியில் முன்னணி வீரர்கள் வெளியே உட்கார வைக்கப்பட்டனர். இது ஆப்பிரிக்க தேசமான துனிசியாவுக்கு சாதகமாக அமைந்தது. தொடக்கம் முதலே முழு உத்வேகத்துடன் வரிந்து கட்டிய துனிசியா அணியினர் 7-வது நிமிடத்தில் கோல் அடித்தனர். ஆனால் அது 'ஆப்-சைடு' என்று மறுக்கப்பட்டது. ஆனாலும் மனம் தளராமல் போராடிய துனிசியா 58-வது நிமிடத்தில் பிரான்சின் தற்காப்பு வளையத்தை உடைத்தது. 2 முன்கள வீரர்களை லாவகமாக ஏமாற்றி துனிசியாவின் வாபி காஸ்ரி அருமையாக கோல் அடித்தார். இந்த உலகக் கோப்பையில் துனிசியாவின் முதல் கோல் இது தான்.
இதனால் அதிர்ச்சிக்குள்ளான பிரான்ஸ் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ், 62-வது நிமிடத்திற்கு பிறகு கிலியன் எம்பாப்வே, கிரிஸ்மான் ஆகிய நட்சத்திர வீரர்களை மாற்று வீரர்களாக களம் இறக்கினார். கடைசி கட்டத்தில் துனிசியாவின் தற்காப்பு வியூகத்தை தகர்க்க பிரான்ஸ் வீரர்கள் எதிரணியின் கோல் கம்பத்தை தொடர்ந்து முற்றுகையிட்டனர். வழக்கமான ஆட்ட நேர முடிந்ததும், காயம் உள்ளிட்ட விரயத்துக்காக 8 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் வெறும் 15 வினாடிகள் மட்டுமே இருந்த போது பிரான்சின் கிரிஸ்மான் கலக்கலாக கோல் அடித்தார். ஆனால் பிரான்ஸ் வீரர்களின் மகிழ்ச்சி நிலைக்கவில்லை. டி.வி. நடுவர் உதவியுடன் ரீப்ளேயை போட்டு பார்த்து அது 'ஆப்-சைடு' என்ற முடிவுக்கு வந்த நடுவர் கோல் இல்லை என்று அறிவித்தார்.
இதனால் துனிசியா 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்சை சாய்த்தது. அடுத்த சுற்று வாய்ப்பு கிட்டாத நிலையில் துனிசியாவுக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. உலகக் கோப்பை கால்பந்தில் ஐரோப்பிய அணிக்கு எதிராக துனிசியா பெற்ற முதல் வெற்றி இது தான்.
அத்துடன் உலகக் கோப்பை தொடரில் கடைசி 9 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் இருந்த நடப்பு சாம்பியன் பிரான்சின் வீறுநடை முடிவுக்கு வந்தது.
ஆஸ்திரேலியா வெற்றி
அல்வக்ராவில் உள்ள அல் ஜனாப் மைதானத்தில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் கட்டாய வெற்றி நெருக்கடியுடன் ஆஸ்திரேலியா- டென்மார்க் அணிகள் மல்லுகட்டின. பந்து கணிசமான நேரம் (69 சதவீதம்) டென்மார்க் பக்கமே சுற்றினாலும் பலன் இல்லை. 60-வது நிமிடத்தில் பந்துடன் தனி வீரராக முன்னேறிய ஆஸ்திரேலியாவின் மேத்யூ லெக்கி, எதிரணியின் முன்கள வீரர்களுக்கு போக்கு காட்டி விட்டு சூப்பராக பந்தை வலைக்குள் செலுத்தினார். அதே முன்னிலையை கடைசி வரை தக்க வைத்த ஆஸ்திரேலியா 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை தோற்கடித்து, 16 ஆண்டுக்கு பிறகு 2-வது சுற்றை அடைந்தது.
'டி' பிரிவில் லீக் சுற்று முடிவில் பிரான்ஸ் (2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளி), ஆஸ்திரேலியா (2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளி) ஆகிய அணிகள் டாப்-2 இடங்களை பிடித்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தன. துனிசியா (ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவுடன் 4 புள்ளி), டென்மார்க் (ஒரு டிரா, 2 தோல்வியுடன் ஒரு புள்ளி) அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறின.