உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்...!
|உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் விவரம்.
தோகா,
உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சிறப்பு ஜெர்மனி முன்னாள் வீரர் மிரோஸ்லாவ் குளோஸ் வசம் உள்ளது. அவர் 24 ஆட்டங்களில் 16 கோல்கள் அடித்து முதலிடத்திலும், பிரேசில் ஜாம்பவான் ரொனால்டோ 15 கோல்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
இதே போல் ஒரே உலக கோப்பையில் அதிக கோல்மழை பொழிந்தவர், பிரான்சின் ஜஸ்ட் பாண்டெயின். இவர் 1958-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் மட்டும் 13 கோல்கள் (6 ஆட்டம்) அடித்து வியக்க வைத்தார்.
மிரோஸ்லாவ் குளோசின் சாதனை நடப்பு தொடரில் முறியடிக்கப்படுவதற்கான சாத்தியம் குறைவு தான்.
தற்போது விளையாடும் வீரர்களில் உலக கோப்பையில் 5-க்கு மேல் கோல் போட்டுள்ள வீரர்களின் பட்டியலை புரட்டி பார்த்தால், ஜெர்மனியின் தாமஸ் முல்லர் (10 கோல்), உருகுவேயின் சுவாரஸ், போர்ச்சுகலின் கிறிஸ்டியானா ரொனால்டோ (தலா 7 கோல்), இங்கிலாந்தின் ஹாரி கேன், பிரேசிலின் நெய்மார், அர்ஜென்டினாவின் மெஸ்சி (தலா 6 கோல்) ஆகியோர் மட்டுமே உள்ளனர்.