'பீலே விரைவில் குணமடைய வேண்டும்' - நெய்மார்
|பிரேசில் அணியின் வெற்றி பீலேவுக்கு நல்ல ஊக்கத்தை அளிக்கும் என்று நம்புவதாக நெய்மார் கூறினார்.
தோகா,
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2-வது சுற்று ஆட்டத்தில் பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை துவம்சம் செய்து தொடர்ச்சியாக 8-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறியது.
இதனிடையே பிரேசிலின் கால்பந்து ஜாம்பவானான 82 வயது பீலே கொரோனா தொற்று காரணமாக சாவ் பாலோ நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும் மைதானத்தில் பிரேசில் அணி வீரர்கள் பீலேவின் உருவம் மற்றும் பெயர் பொறித்த பேனரை கையில் பிடித்தபடி போஸ் கொடுத்தனர்.
ஆட்டத்தை காண வந்து இருந்த பிரேசில் ரசிகர்கள் பலர் பீலேவின் உருவம் பொறித்த பனியன் அணிந்து இருந்தனர். அத்துடன் அவரது உருவப்படம் பொறித்த பேனர்களை கையில் ஏந்தி இருந்தனர்.
வெற்றிக்கு பிறகு பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் கூறியதாவது;-
"பீலேவின் உடல் நிலை குறித்து பேசுவது கடினமானதாகும். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று நாங்கள் வாழ்த்துகிறோம். இந்த வெற்றியும், நாங்கள் வைத்து இருக்கும் பேனரும் அவருக்கு நல்ல ஊக்கத்தை அளிக்கும் என்று நம்புகிறோம்.
எனக்கு காயம் அடைந்த கணுக்காலில் இப்போது வலி எதுவுமில்லை. இந்த ஆட்டத்தில் ஆடுவதற்குரிய உடல் தகுதியை எட்ட காரணமாக இருந்த மருத்துவ குழுவினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் நன்றாக விளையாடியதாக நினைக்கிறேன். இந்த ஆட்டத்தில் நாங்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது.
நாங்கள் எப்போதும் முன்னேற முடியும் என்று நினைக்கிறேன். இந்த போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி எல்லாம் நடந்தது. வெற்றியை ரசிகர்கள் ஸ்டேடியத்தில் அருமையாக கொண்டாடினார்கள். அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துகள்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.