< Back
உலக கோப்பை கால்பந்து - 2022
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சாதனையை சமன் செய்த நெய்மார்
உலக கோப்பை கால்பந்து - 2022

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சாதனையை சமன் செய்த நெய்மார்

தினத்தந்தி
|
10 Dec 2022 5:02 AM IST

பிரேசில் வீரர்களில் அதிக கோல் அடித்தவரான பீலேவின் சாதனையை நெய்மார் சமன் செய்தார்.

தோகா,

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு எஜூகேசன் சிட்டி மைதானத்தில் அரங்கேறிய முதலாவது கால்இறுதியில் 5 முறை சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான பிரேசில், குரோஷியாவுடன் மோதியது.

பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், கடத்திக் கொடுப்பதிலும் இரு அணியினரும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டியதால் களத்தில் அனல் பறந்தது. வழக்கமான 90 நிமிடங்களில் ஆட்டம் கோலின்றி சமன் ஆனது.

இதையடுத்து தலா 15 நிமிடங்கள் வீதம் மொத்தம் 30 நிமிடங்கள் கூடுதல் நேரமாக ஒதுக்கப்பட்டது. 103-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் பெட்கோவிச் கம்பத்திற்கு மேலாக அடித்து ஏமாற்றினார்.

ஒரு வழியாக 105-வது நிமிடத்தில் பிரேசில் கோல் அடித்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் இந்த கோலை அடித்தார். அவரை தடுக்க குரோஷிய கோல் கீப்பர் லிவாகோவிச் முன்னோக்கி வந்த போது அவரை சாதுர்யமாக ஏமாற்றிய நெய்மார் வலைக்குள் பந்தை அனுப்பி ஸ்டேடியத்தை அதிர வைத்தார்.

நெய்மாருக்கு இது 77-வது சர்வதேச கோலாகும். இதன் மூலம் பிரேசில் வீரர்களில் அதிக கோல் அடித்தவரான பீலேவின் சாதனையை அவர் சமன் செய்தார்.

இருப்பினும் நேற்றைய ஆட்டத்தின் பரபரப்பான பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் குரோஷியா 4-2 என்ற கணக்கில் பிரேசிலை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்