92 ஆண்டு கால உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்திய மறக்க முடியாத பல நினைவுகள்...!
|92 ஆண்டு கால உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்திய மறக்க முடியாத பல நினைவுகள் பற்றி பார்க்கலாம்.
தோகா,
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் இந்த போட்டி நடைபெறவில்லை. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. கால்பந்து ரசிகர்களை கட்டிபோடப்போகும் இந்த திருவிழா டிசம்பர் 18-ந் தேதி வரை 29 நாட்கள் அரங்கேறுகிறது.
அங்குள்ள 5 நகரங்களில் பிரமாண்டமாக கட்டப்பட்டு இருக்கும் 8 ஸ்டேடியங்களில் போட்டி நடக்கிறது. அரபு நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். அத்துடன் ஆசிய கண்டத்தில் இந்த போட்டி நடப்பது 2-வது முறையாகும். இந்நிலையில் இதுவரை நடந்துள்ள உலக கோப்பை போட்டிகளில் நடைபெற்ற சில மறக்க முடியாத நினைவுகள் பற்றி பார்க்கலாம்.
* 1986-ம் ஆண்டு உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான கால்இறுதியில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜென்டினா அணியின் இரண்டு கோல்களையும் கேப்டன் டியாகோ மரடோனா அடித்தார். இதில் 51-வது நிமிடத்தில் அடித்த கோல் பலத்த சர்ச்சைக்குள்ளானது. தலையால் முட்டுவதற்காக துள்ளி குதித்த போது பந்து அவரது கையில் பட்டு வலைக்குள் புகுந்தது.
பந்து கையில் பட்டதை கவனிக்காத நடுவர் கோல் என்று அறிவித்தார். இந்த சம்பவம் குறித்து மரடோனாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, 'அது கடவுளின் கையால் வந்த கோல்' என்று நகைச்சுவையாக பதிலளித்தார். அதுவே இன்று 'கடவுளின் கை கோல்' என்று அழைக்கப்படுகிறது. அந்த போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்து ரூ.20 கோடிக்கு ஏலம் போனது சுவராஸ்யமான விஷயமாகும்.
* 2006-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் கேப்டன் ஜிடேன், இத்தாலியின் மெட்டராசி இடையிலான இடியை யாரும் மறந்து விட முடியாது. கூடுதல் நேரத்தில் ஜிடேன் திடீரென மெட்ட ராசியை ஆடு முட்டுவது போல் தலையால் முட்டி சாய்த்தார். தனது சகோதரியை மெட்டராசிகேவலமாக பேசியதால் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக ஜிடேன் பின்னர் கூறினார். இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி தோல்வியை தமுவியது. அதன் பிறகு ஜிடேன்-மெட்டராசி மோதலை சித்தரிக்கும் வகையில் சிலை வடிவமைக்கப்பட்டு பிரான்சில் பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
* 2014-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இத்தாலி-உருகுவே அணிகள் இடையிலான ஆட்டத்தில் நடந்த கடி சம்பவம் கால்பந்து உலகில் ஒரு சலசலப்பை உருவாக்கியது. ஆட்டம் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருந்த போது இத்தாலி வீரர் செலினியை, உருகுவே நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரஸ் திடீரென தோள்பட்டையில் கடித்து குதறினார். ஏற்கனவே இருமுறை இதுபோன்ற சர்ச்சையில் சிக்கி உள்ள சுவாரஸ்க்கு 4 மாதம் மற்றும் 9 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த 'கடி மன்னன்' இந்த உலக கோப்பை போட்டியிலும் விளையாட இருப்பது கவனிக்கத்தக்கது.