சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரமாண்டம்: உலக கோப்பை கால்பந்து போட்டியால் களைகட்டும் கத்தார்
|உலக கோப்பை கால்பந்து திருவிழா அரபு நாடான கத்தாரில் வருகிற 20-ந்தேதி தொடங்க உள்ளது.
தோகா,
உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டில் ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் மகுடம் சூடியது.
இந்த நிலையில் 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா அரபு நாடான கத்தாரில் வருகிற 20-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 18-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 5 முறை சாம்பியனான பிரேசில், நடப்பு சாம்பியன் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து, அர்ஜென்டினா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, டென்மார்க், போர்ச்சுகல், உருகுவே, பெல்ஜியம் உள்பட 32 அணிகள் களம் இறங்குகின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் என்ற 2-வது சுற்றுக்குள் நுழையும்.
போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 3.30 மணி, 6.30 மணி, இரவு 9.30 மணி, நள்ளிரவு 12.30 மணி ஆகிய நேரங்களில் நடக்கிறது. 20-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தார், ஈகுவடாரை (இரவு 9.30 மணி) சந்திக்கிறது. போட்டிகளை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
கடந்து வந்த பாதை
உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் குறைந்த மக்கள் தொகையை கொண்டநாடு என்ற பெருமையை கத்தார் பெறுகிறது. இங்குள்ள மக்கள் தொகை வெறும் 29 லட்சம் தான். 11 ஆயிரத்துக்கு 500 சதுரகிலோமீட்டர் சுற்றளவுக்குள் அடங்கிய கத்தார் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளத்தால் பணம்கொழிக்கும் தேசமாகும்.
ஆனால் உலக கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை கத்தார் விதிமுறைக்கு புறம்பாக பெற்றதாக குற்றச்சாட்டு இன்னும் நிலவுகிறது.
இந்த உலக கோப்பை போட்டிக்கான உரிமத்தை பெற கத்தார், அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் 2010-ம் ஆண்டில் போட்டியிட்டன. இதில் கத்தார், அமெரிக்கா இடையே நேரடி போட்டி காணப்பட்டது. சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் 14-8 என்ற கணக்கில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி கத்தார் வாய்ப்பை தட்டிச் சென்றது. ஆனால் தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க 'பிபா' நிர்வாகிகளுக்கு கத்தார் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக புகார் கிளம்பியது. இதையடுத்து விசாரணை நடத்திய சர்வதேச கால்பந்து சம்மேளனம், கத்தார் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறிவிட்டது.
இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு புறம் மனித உரிமை மீறல்கள் கத்தாருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.
உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக 8 மைதானங்கள் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளன. சாலை சீரமைப்பு, மெட்ரோ ரெயில், விமான நிலைய விரிவாக்கம், 100-க்கும் மேற்பட்ட நட்சத்திர ஓட்டல்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து நாடுகளும் ஆச்சரியப்படும் அளவுக்கு மேம்படுத்தியுள்ளது. ஆனால் கட்டுமான பணிகளுக்கு வரவழைக்கப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் சரியாக நடத்தப்படவில்லை, போதிய ஊதியம் வழங்கப்படவில்லை, சுகாதாரமின்றி மோசமான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
தொழிலாளர்கள் நாட்டை விட்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த காலக்கட்டத்தில் கால்பந்து தொடர்பான திட்ட பணிகளில் ஈடுபட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என ஆய்வுகள் சுட்டிகாட்டின. ஆனால் கட்டுமான பணிகளின் போது 37 பேர் மட்டுமே இறந்ததாக கத்தார் தரப்பு கூறியது. எதிர்ப்பு காரணமாக 2020-ம் ஆண்டில் தொழிலாளர்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட்டன. ஆனாலும் மனித உரிமை மீறல் காரணமாக கத்தார் உலக கோப்பை போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்காமல் இல்லை.
கட்டுப்பாடுகள்
இத்தகைய சர்ச்சைகளை எல்லாம் கடந்து இப்போது கத்தார் உலக கோப்பை போட்டிக்காக விழாக் கோலம் பூண்டுள்ளது. முக்கியமான இடங்களில் உலக கோப்பை வீரர்களின் புகைப்படங்கள், ராட்சத கால்பந்துகள் மற்றும் உலக கோப்பை மாதிரிகள், விளம்பர போர்டுகள் கண்ணை கவருகின்றன.
இஸ்லாமிய தேசமான கத்தாரில் சட்டதிட்டங்கள் கடுமையாக உண்டு. வெளிநாட்டு ரசிகர்களுக்காக அவை கொஞ்சம் தளர்த்தப்பட்டு உள்ளன. போட்டிக்கு முன்பாக மற்றும் போட்டி நிறைவடைந்த பிறகு மைதானத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மதுபானங்கள் வழங்கப்படும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயம் கத்தாரில் ஓரின சேர்க்கை சட்டவிரோதமானது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படாது. தங்களது கலாசாரத்தை மதித்து நடக்க வேண்டும் என்று கத்தார் தலைமை பொறுப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உலக போட்டியை நேரில் ரசிக்க மொத்தம் 15 லட்சம் ரசிகர்கள் வரை கத்தாருக்கு படையெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் கொண்டாட்டத்துக்காக பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மெகாதிரையில் போட்டியை பார்க்கலாம். இசை கச்சேரி, ஆட்டம், பாட்டம் என்று 29 நாட்களும் உற்சாக வெள்ளத்தில் மிதக்கலாம்.
அது எல்லாம் சரி.... இதற்காக கத்தார் செலவிடும் தொகையை கேட்டால் மயக்கமே வந்து விடும்.
இந்த போட்டிக்காக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு மேல் கத்தார் செலவிட்டுள்ளது. உலக கோப்பை வரலாற்றில் அதிக தொகை செலவிடப்பட்ட போட்டி இது தான்.
உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.341 கோடி பரிசு
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. அங்குள்ள 5 நகரங்களில் 8 மைதானங்களில் இந்த போட்டி அரங்கேறுகிறது. உலக கோப்பை போட்டிக்கான பரிசுத் தொகை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான மொத்த பரிசுத் தொகை ரூ.3,574 கோடியாகும். இது கடந்த உலக கோப்பை (2018) போட்டியுடன் ஒப்பிடுகையில் ரூ.324 கோடி அதிகமாகும்.
சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி ரூ.341 கோடியை பரிசாக அள்ளும். 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.243 கோடி பரிசாக கிடைக்கும். 3-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.219 கோடியும், 4-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.203 கோடியும் வழங்கப்படும்.