< Back
உலக கோப்பை கால்பந்து - 2022
உலக கோப்பை கால்பந்து: வெற்றியோடு தொடங்கும் ஆவலில் இங்கிலாந்து...ஈரான் அணியை எதிர்கொள்கிறது
உலக கோப்பை கால்பந்து - 2022

உலக கோப்பை கால்பந்து: வெற்றியோடு தொடங்கும் ஆவலில் இங்கிலாந்து...ஈரான் அணியை எதிர்கொள்கிறது

தினத்தந்தி
|
21 Nov 2022 5:47 AM IST

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று மாலை 6.30 மணிக்கு இங்கிலாந்து-ஈரான் அணிகள் மோதுகின்றன.

தோகா,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. 2-வது நாளான இன்று 3 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஈரான் அணிகள் மோதுகின்றன.

மகுடம் சூடும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டு உள்ள ஹாரி கேன் தலைமையிலான இங்கிலாந்து கடந்த உலக கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறியது. முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து இன்றைய ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது.

இதுவரை 51 சரவதேச கோல்கள் அடித்துள்ள ஹாரி கேன் இன்னும் 3 கோல் போட்டாக் அதிக கோல்கள் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை வெய்ன் ரூனியிடம் இருந்து (53 கோல்) தட்டிப்பறிப்பார்.

பில் போடென், ஜூட் பெலிங்கம், டெக்லன் ரைஸ் ஆகியோரும் அந்த அணியில் கவனிக்கத்தக்க வீரர்களாக உள்ளனர். அதே சமயம் காயத்தில் இருந்து ஓரளவு மீண்டுள்ள கைல் வால்கர், கால்வின் பிலிப்ஸ் ஆகியோர் ஆடுவது சந்தேகம் தான். ஆசிய கண்டத்தின் நம்பர் 1 அணியான ஈரான் தகுதி சுற்றின் 3வது ரவுண்டில் தோல்வியே சந்திக்காமல் ( 6 வெற்றி, 4 டிரா) முதலிடத்தை பெற்றது.

தகுதி சுற்றில் 11 கோல்கள் அடித்த சர்தார் அஸ்மோன் பின்னங்காலில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டு இருப்பது ஈரானுக்கு பின்னடைவாகும், 121 ஆட்டங்களில் விளையாடிய அனுபவசாலியான கேப்டன் ஈசன் ஹஜ்சாபி, மேதி தரேமி, அலிஜெரா ஜஹன்பாக்‌ஷ் ஆகியோரை தான் அந்த அணி அதிகமாக நம்பி இருக்கிறது.

6வது முறையாக உலக கோப்பையில் கால்பதிக்கும் ஈரான் இதுவரை முதல் சுற்றைக்கூட தாண்டியதில்லை. இந்த முறையும் அது கடினம் தான். இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

மேலும் செய்திகள்