அணியில் இருந்து விலகுவதாக மிரட்டினாரா ரொனால்டோ? போர்ச்சுகல் கால்பந்து சம்மேளனம் விளக்கம்
|அணியில் இருந்து வெளியேறப்போவதாக கூறி அணி நிர்வாகத்தை ரொனால்டோ மிரட்டியதாக தகவல்கள் வெளியாகின.
தோகா,
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்துக்கு எதிரான 2-வது சுற்றில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் 37 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடக்கத்தில் களம் இறக்கப்படவில்லை. வெளியே உட்கார வைக்கப்பட்டதால் டென்ஷனுடன் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த அவர் 73-வது நிமிடத்தில் மாற்று வீரராக களம் அனுப்பப்பட்டார்.
ஆனாலும் தலைச்சிறந்த ஒரு வீரரை பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ் ஆடும் லெவனில் சேர்க்காமல் நீக்கியது விமர்சனத்துக்குள்ளானது. இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் இருந்து வெளியேறப்போவதாக கூறி அணி நிர்வாகத்தை மிரட்டியதாக தகவல்கள் வெளியாகின.
இதனை போர்ச்சுகல் கால்பந்து சம்மேளனம் மறுத்துள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் "கத்தாரில் தற்போது உலக கோப்பை போட்டியில் விளையாடி வரும் சூழலில் பாதியிலேயே விலகுவதாக மிரட்டுவதற்கு எங்களது கேப்டன் ரொனால்டோவுக்கு நேரம் கிடையாது. தேசிய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு முறையும் அவர் தனித்துவமான சாதனைகளை படைக்கிறார். அதனை நாம் மதிக்க வேண்டும்" என்று அந்த நாட்டு கால்பந்து சம்மேளனம் விளக்கம் அளித்துள்ளது. போர்ச்சுகல் அணி கால்இறுதியில் மொராக்கோவை நாளை எதிர்கொள்கிறது.