பொதுத்துறை வங்கிகளில் வேலை: 6,128 பணியிடங்கள்- கல்வி தகுதி என்ன? முழு விவரம்
|எஸ்.பி.ஐ வங்கியை தவிர இதர பொதுத்துறை வங்கிகளில் உள்ள எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள கிளர்க் (எழுத்தர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6,128 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 665 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காலியாக உள்ள 665 கிளர்க் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். முதன்மை தேர்வு, மெயின் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் இந்த தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் மற்றும் அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ளதால், விருப்பமுள்ளவர்கள் www.ipbs.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். 20 வயது முதல் 28 வயதுள்ள நபர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
கணிணி வழியிலான தேர்வுகள் நடைபெறும். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், புதுவை ஆகிய நகரங்களில் முதன்மை தேர்வு நடைபெறும். மெயின் தேர்வை பொறுத்தவரை சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருது நகர், புதுச்சேரி ஆகிய நகரங்களில் நடைபெறும்.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி/ எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் ரூ.175 ஆகும். இன்று முதல் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 21 ஆம் தேதி கடைசி நாளாகும்.