மத்திய அரசு வேலைவாய்ப்பு.. 8,326 காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க 31-ம் தேதி கடைசி நாள்
|தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தேசிய அளவில் தேர்வு நடத்தப்பட உள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசின் பல்வேறு துறைகள், அமைச்சங்கள், அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள், பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுகின்றன. அவ்வகையில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,326 பணியிடங்களை நிரப்புவதற்கு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அலுவலகத்தின் பல பணிகளை மேற்கொள்ளக்கூடிய மல்டிடாஸ்கிங் ஊழியர்கள் மற்றும் ஹவால்தார் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்த பணிகளில் சேருவதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஜூலை 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 1 ஆகும். விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கு ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும். விண்ணப்பங்களை திருத்துவதற்கான விண்டோ அந்த நாட்களில் திறக்கப்படும். விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தேசிய அளவில் தேர்வு நடத்தப்பட உள்ளது. கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) மற்றும் உடல் திறன் தேர்வு (ஹவால்தார் பதவிகளுக்கு மட்டும்) என இரண்டு நிலைகளில் தேர்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து ஆவணங்கள் சரிபார்க்கப்படும். அத்துடன், விண்ணப்பதாரர்கள் அவர்கள் விரும்பிய வேலையைப் பெறுவதற்கு ஆட்சேர்ப்பு செயல்முறையின் அனைத்து நிலைகளிலும் தேர்ச்சி பெறவேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாத சம்பளம் ரூ 18,000 முதல் 22,000 வரை வழங்கப்படும்.
இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பாணை பணியாளர் தேர்வை மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பதிவு தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு தேதி, தேர்வு முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அதில் தெரிந்துகொள்ளலாம்.