சலாலா துறைமுகத்துக்கு 2,610 சுற்றுலா பயணிகளுடன் சொகுசு கப்பல் வருகை
|சலாலா துறைமுகத்துக்கு 2,610 சுற்றுலா பயணிகளுடன் சொகுசு கப்பல் வருகை புரிந்தது.
சலாலா,
ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வெப்பநிலை குறைந்து வருகிறது. இதன் காரணமாக இதமான காலநிலை நிலவி வருவதால் இங்கு சுற்றுலா பயணிகள் வர அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதனால் ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கப்பல் மூலம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று சலாலாவில் சுல்தான் காபூஸ் துறைமுகத்துக்கு சொகுசு கப்பலில் 2 ஆயிரத்து 610 சுற்றுலா பயணிகள் வந்தனர். ஜோர்டான் நாட்டின் அகாபா துறைமுகத்தில் இருந்து வந்த இந்த கப்பலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இருந்தனர். அவர்களுக்கு ஓமன் நாட்டின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் அந்த பயணிகள் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் அவர்கள் அனைவரும் ஓமன் நாட்டில் உள்ள அகழ்வாராய்ச்சி செய்யும் இடங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கடற்கரை பகுதிகள், பாரம்பரிய சந்தைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதன் மூலம் சுற்றுலா பயணிகள் ஓமன் நாட்டின் பாரம்பரியம், கலாசாரம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ள உதவியாக இருந்ததாக தெரிவித்தனர். இந்த கப்பலை தொடர்ந்து ஓமன் நாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளுடன் சொகுசு கப்பல்கள் அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.