< Back
துபாய்
துபாய்

ஏமன் நாட்டில் கரையை கடந்த 'தேஜ்' புயல்: ஓமனில் வெளுத்து வாங்கிய கனமழை

தினத்தந்தி
|
25 Oct 2023 12:30 AM IST

ஏமன் நாட்டில் கரையை கடந்த 'தேஜ்' புயலால் அந்த நாட்டின் அருகில் உள்ள ஓமன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் போக்குவரத்து மற்றும் மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டது.

மஸ்கட்,

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபி கடல் பகுதிகளில் புயலாக உருவெடுத்தது. தென்மேற்கு அரபி கடலில் உருவாகிய இந்த புயலுக்கு 'தேஜ்' என பெயரிடப்பட்டது. இந்த புயல் தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் அதி தீவிர புயலாக மாறி ஏமன், ஓமன் நாடுகளை நோக்கி நகர்ந்து வந்தது. இந்த நிலையில் அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த 'தேஜ்' புயல், ஏமன் நாட்டின் கடற்கரையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.30 முதல் 3.30 மணிக்குள் கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்கும் போது 125 கிலோ மீட்டர் முதல் 135 கிலோ மீட்டர் வரை காற்று வேகமாக வீசியது.

கனமழை

ஏமன் நாட்டில் கரையை கடந்த புயல் காரணமாக, அந்த நாட்டையொட்டி உள்ள ஓமன் நாட்டின் தோபர் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழை காரணமாக பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போலீசார் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களை யாரும் கடந்து விடாதபடி கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நேற்று செவ்வாய்க்கிழமை வரை ரக்யுத் பகுதியில் மட்டும் மிகவும் அதிக அளவாக 230 மில்லி மீட்டர் மழை பெய்தது. தல்குட் பகுதியில் 203 மில்லி மீட்டர் அளவும், சலாலா பகுதியில் 56 மில்லி மீட்டர் அளவு மழையும் பெய்தது.

மின்சாரம் பாதிப்பு

புயலால் ஏற்பட்ட பலத்த காற்றின் காரணமாக ஆங்காங்கே மின் கம்பங்கள் சாய்ந்தன.

இதன் காரணமாக சில இடங்களில் மின்சாரம் பாதிக்கப்பட்டது. அதனை சரிசெய்யும் பணியில் மின்சாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சாதா பகுதியில் உள்ள ஹாசிக் சாலையில் மலையில் இருந்து பாறைகள் விழுந்து கிடந்ததால் அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த பாறைகளை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

மீட்பு பணிகள்

மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்காணிக்க 11 சிறப்பு மையங்கள் அரசின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தேவையான பணிகளை உடனுக்குடன் வழங்கி வருகின்றன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தற்காலிக மருத்துவமனைகள் ராணுவத்தின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உடல்நல பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

பாதிப்பை தடுக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றுக்கு கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பொது விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

'தேஜ்' புயலால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டதால், ஓமன் முழுவதும் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்