அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கனமழை
|அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
அபுதாபி,
அமீரகத்தில் சீரற்ற காலநிலை நிலவுவதால் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. மேலும் பலத்த மழை பெய்து தண்ணீர் தேங்கும் பள்ளத்தாக்கு பகுதிகளில் குடியிருப்பாளர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதில் அபுதாபி போலீசார் வாகனத்தில் செல்வோர் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வேகத்தில் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
ராசல் கைமாவில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பநிலை வெகுவாக குறைந்தது. மேலும் அங்கு பலத்த காற்று வீசியதால் விமான நிலைய பகுதி அருகே மரத்தின் கிளைகள் சாலையில் முறிந்து விழுந்தது.
தொடர்ந்து இடியுடன் கனமழை பெய்ததால் புஜேராவின் சவக்கா பகுதியில் சாலையில் மழைவெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இது குறித்த வீடியோ காட்சிகளை எக்ஸ் தளத்தில் தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.