< Back
துபாய்
அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கன மழை
துபாய்

அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கன மழை

தினத்தந்தி
|
27 Oct 2023 2:00 AM IST

அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கன மழை கொட்டித்தீர்த்தது.

துபாய்,

அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இடி, மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. மேலும் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து அமீரக தேசிய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்யும் என ஏற்கனவே முன்னெச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதனையடுத்து அபுதாபி, துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இடி, மின்னலுடன் கன மழை கொட்டித்தீர்த்தது. மேலும் சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இந்த மழையால் வெப்பநிலை குறைந்து காணப்பட்டது.

மேலும் சார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ராசல் கைமா, புஜேரா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. மழையை வரவேற்கும் விதமாக, மழையில் நனைந்தப்படி ஆடிபாடி மகிழ்ந்தனர். ஒரு சில இடங்களில் பெய்த ஆலங்கட்டி மழையை பொதுமக்கள் 'செல்பி' எடுத்து மகிழ்ந்ததை காணமுடிந்தது. மேலும் ஆலங்கட்டி மழையை கையில் பிடித்து விளையாடினர்.

இந்த மழை காரணமாக அபுதாபி, துபாய், சார்ஜா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் மிகவும் மெதுவாக ஊர்ந்து சென்றது. பஸ், டாக்சி உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்தவர்கள் தங்களது இடத்தை அடைய நீண்ட நேரமானது.

இந்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் பார்வைத்திறன் குறைந்து காணப்பட்டது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதை காண முடிந்தது. மேலும் அமீரகத்தில் இன்றும் (வெள்ளிக்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அதில் தெரிவித்ததுள்ளது.

அபுதாபி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பெய்த மழை தொடர்பான வீடியோ வானிலை மையத்தின் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதேபோல் பொதுமக்களில் சிலரும் தங்களது பகுதிகளில் பெய்த மழையை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

அபுதாபி, துபாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் அவசர உதவி தேவைபட்டால் அது குறித்து போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

துபாயில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக இன்று ஒரு நாள் சில அரசுத்துறை அதிகாரிகள் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்கி துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்