< Back
துபாய்
ஓட்டல்களுக்கு வெளியே உணவு பரிமாற அனுமதி தேவை.. மீறினால் அபராதம்: அபுதாபி மாநகராட்சி எச்சரிக்கை
துபாய்

ஓட்டல்களுக்கு வெளியே உணவு பரிமாற அனுமதி தேவை.. மீறினால் அபராதம்: அபுதாபி மாநகராட்சி எச்சரிக்கை

தினத்தந்தி
|
20 Oct 2023 6:15 PM IST

விதிமீறலில் ஈடுபடுவோருக்கு 5 ஆயிரம் திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி மாநகராட்சி எச்சரித்துள்ளது.

அபுதாபி:

ஓட்டல்களுக்கு வெளியே மேஜைகள் வைத்து உணவுகள் பரிமாற முறையான அனுமதி பெற வேண்டும். விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு 5 ஆயிரம் திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அபுதாபி மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தில் வெப்பநிலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதமான காலநிலை நிலவுவதால் ஓட்டல்கள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் தங்களின் உணவுப் பொருட்களை கடைகளுக்கு வெளியே மேஜை அமைத்து பரிமாற அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

வர்த்தக நிறுவனங்கள் தங்களின் கடைகளுக்கு வெளியே உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பரிமாற விரும்பினால், 'தாம்' எனப்படும் செயலியின் மூலமாக மாநகராட்சிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது கட்டிட உரிமையாளரின் அனுமதி கடிதம் கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும். மேலும் கட்டிட உரிமம் காலாவதியானது 6 மாதத்துக்கு குறையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் கடைக்கு வெளியே உள்ள இடத்தின் வரைபடத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

இதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து எத்தனை மேஜைகள் மற்றும் நாற்காலிகள் அங்கு போட இடம் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ற கட்டணத்தை வர்த்தக நிறுவனம் செலுத்த வேண்டும் என தெரிவிப்பர். அந்த கட்டணத்துடன் திரும்ப பெறக்கூடிய முன்பணமாக 10 ஆயிரம் திர்ஹாம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். இந்த அனுமதி ஒரு வருட காலத்துக்கு வழங்கப்படும். தேவைப்படும் பட்சத்தில் அதனை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

முறையான அனுமதி பெறாமல் வர்த்தக நிறுவனங்கள் தங்களது கடைகளுக்கு வெளியே மேஜைகளை அமைத்தால் விதிமீறலாக கருதப்படும். விதிமீறலில் ஈடுபடுவோருக்கு 5 ஆயிரம் திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும். அனுமதி பெற்று நடக்கும் இடங்களில் விதிமீறல்கள் இருக்கும் பட்சத்தில் வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இது தொடர்பாக வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்