< Back
துபாய்
அமீரகத்தை சுற்றி
துபாய்

அமீரகத்தை சுற்றி

தினத்தந்தி
|
27 Oct 2023 2:30 AM IST

அமீரகத்தை சுற்றி உள்ள செய்திகள்.

அபுதாபி

* அபுதாபியில் உள்ள அல் நகீல் அரண்மனையில் அல் தப்ரா பகுதிக்கான ஆட்சியாளரின் பிரதிநிதி ஷேக் ஹம்தான் பின் ஜாயித் அல் நஹ்யானை அமீரகத்துக்கான கத்தார் நாட்டின் தூதர் டாக்டர் சுல்தான் அல் மன்சூரி சந்தித்து பேசினார். புதிய தூதராக பொறுப்பேற்றதை தொடர்ந்து இந்த சந்திப்பு நடந்தது. அப்போது புதிய தூதருக்கு, ஆட்சியாளரின் பிரதிநிதி வாழ்த்து தெரிவித்தார்.

துபாய்

* எமிரேட்ஸ் என்.பி.டி. வங்கியின் துணை தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஹிசாம் அப்துல்லா அல் காசிம் கூறும்போது, ''இந்த ஆண்டின் முதல் 9 மாதத்தில் வங்கியின் லாபம் 92 சதவீதமாக உள்ளது. இதன் மதிப்பு 1750 கோடி ஆகும். இது வங்கியின் வளர்ச்சிக்கு மிகவும் சிறப்பானதொரு தருணமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வங்கி துபாயில் நடைபெற இருக்கும் ஐ.நா. சபையின் பருவநிலை மாநாடு உள்ளிட்ட முக்கிய மாநாடுகளுக்கு ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது என்றார்.

சார்ஜா

* சார்ஜா புள்ளியியல் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை செயற்கை நுண்ணறிவு காலத்தில் தரவு பகுப்பாய்வு என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கருத்தரங்கில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் தரவுகளை மேலாண்மை செய்வது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து பேசப்பட்டது. சார்ஜா புள்ளியியல் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறையின் தலைவர் ஹமத் அலி அப்துல்லா அல் மக்மூது கூறும்போது, ''தற்போது இருந்து வரும் டிஜிட்டல் மேம்பாட்டில் இது போன்ற கருத்தரங்கு மிகவும் முக்கியமானது. இது ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது'' என்றார்.

அஜ்மான்

* அஜ்மான் வர்த்தக சபை 'டிரேட் மார்க்' தொடர்பான சிறப்பு கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த கருத்தரங்கில் அதிகாரிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் 'டிரேட் மார்க்' தொடர்பான சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து சட்ட வல்லுனர்கள் விவரித்தனர். அது தொடர்பான சந்தேகங்களை வர்த்தகர்கள் கேட்டு தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தனர்.

புஜேரா

* புஜேரா பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஹமத் பின் முகம்மது அல் சர்கியை சூடான் நாட்டின் துணைத் தூதர் ஜாகிர் அப்தெல் பாதில் அகப், ஈரான் நாட்டின் துணைத் தூதர் முகம்மது சொலைமானி மற்றும் எத்தியோப்பியா நாட்டின் துணைத் தூதர் அக்லிலு கெபெதெ எரெனா ஆகியோர் தனித்தனியே சந்தித்தனர். புதிதாக பொறுப்பேற்றதையடுத்து மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்தது. அப்போது புதிய துணை தூதர்களுக்கு பட்டத்து இளவரசர் வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்