வார விடுமுறை: திருவண்ணாமலையில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
|வார விடுமுறையையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவில் கடந்த 13-ந்தேதி காலையில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் காட்சி அளிக்கும். அதன்படி, மகா தீபத்தை தரிசனம் செய்ய அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை முதலே பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். நேரம் செல்ல செல்ல கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவிலில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலையாகவே காட்சியளித்தது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பொது தரிசன வழியில் சென்று சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர். சில பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் தங்கள் குழந்தைகளை கரும்பு தொட்டிலில் வைத்து மாட வீதியை சுற்றி வந்தனர்.