< Back
ஆன்மிகம்
ஒரே நாளில் தரிசனம்..! சகல வளங்களும் அருளும் பஞ்ச ஆரண்ய தலங்கள்
ஆன்மிகம்

ஒரே நாளில் தரிசனம்..! சகல வளங்களும் அருளும் பஞ்ச ஆரண்ய தலங்கள்

தினத்தந்தி
|
8 Jan 2025 3:48 PM IST

அதிகாலை துவங்கி நள்ளிரவு வரை அடுத்தடுத்த கால பூஜையில் கலந்துகொள்ள வசதியிருப்பதால், ஐந்து கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்க இயலும்.

சிவபெருமானின் பஞ்சாரண்யத் தலங்கள் ஐந்து. 'ஆரண்யம்' என்றால் 'காடு' என்று பொருள். 'பஞ்சாரண்யம்' என்றால் ஐந்து வகை வனங்கள் என்று பொருள்படும். ஈசன் முல்லை வனத்தில் அருளும் திருக்கருகாவூர், பாதிரி வனத்தில் அருளும் திருஅவளிவநல்லூர், வன்னி வனத்தில் அருளும் திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவார மங்கலம்), பூளை வனத்தில் அருளும் திரு இரும்பூளை (ஆலங்குடி), வில்வவனத்தில் அருளும் திருக்கொள்ளம்புதூர் (திருக்களம்பூர்) ஆகிய தலங்களே பஞ்சாரண்யத் தலங்களாகும்.

தொன்மையான இந்த தலங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். ஒரே நாளில் இந்த ஐந்து தலங்களையும் தரிசித்தால் திருக்கயிலையை தரிசித்த பெரும்பேறு கிட்டும். அதிகாலை துவங்கி நள்ளிரவு வரை அடுத்தடுத்த காலபூஜையில் கலந்துகொள்ள வசதியிருப்பதால், இந்த ஐந்து கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்க இயலும்.

இதில் முதலாவதாகத் தரிசிக்க வேண்டிய ஆலயம் திருக்கருகாவூர். இங்கு உஷத் காலமாகிய காலை 5 மணி முதல் 6 மணிக்குள் வழிபட வேண்டும். இரண்டாவது அவளிவநல்லூர். இங்கு காலசந்தியில் காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் வழிபாடு செய்ய வேண்டும். மூன்றாவது அரித்துவாரமங்கலம். இந்த தலத்தில் உச்சிகாலத்தில் பகல் 11 மணி முதல் நண்பகல் 12.30 மணிக்குள் தரிசனம் செய்ய வேண்டும். நான்காவதாக ஆலங்குடி. இங்கு சாயரட்சையில் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் வழிபாடு முடிக்க வேண்டும். ஐந்தாவதாக திருக்களம்பூர். இங்கு அர்த்தஜாமத்தில் இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணிக்குள் வழிபட வேண்டும்.

இந்த ஐந்து ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசித்து வாழ்வில் பெறுதற்கரிய பேறுகளையும், சகல வளங்களையும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்பது முன்னோர்களின் திருவாக்கு ஆகும்.

மேலும் செய்திகள்