இன்று எம துவிதியை: தீர்க்காயுளுடள் வாழ சகோதரி வீட்டில் சாப்பிடுங்க..!
|எம துவிதியை தினத்தன்று உடன் பிறந்தவர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்வது நன்று.
ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை துவிதியை, எம துவிதியை ஆகும். எம தர்மராஜன் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்று உணவருந்தி சகோதரியை ஆசீர்வதித்த நாள் என்பதால், எம துவிதியை என அழைக்கப்படுகிறது. இந்த தினம் சகோதர, சகோதரிகளின் ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. உடன்பிறந்தவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ எமதர்மனை பிரார்த்தனை செய்யும் தினமாகவும் திகழ்கிறது.
இந்த தினத்தில், சகோதரன் தன் சகோதரியின் அழைப்பின் பேரில் சகோதரியின் வீட்டிற்கு சென்று உணவு அருந்தி பரிசுகளைப் பரிமாறிக் கொண்டு ஆசீர்வாதம் செய்தால் இருவருக்கிடையே அன்பு என்றும் நிலைத்திருக்கும். சகோதரனுக்கு தீர்க்காயுளும், சகோதரிக்கு தீர்க்காயுளுடன் தீர்க்க சுமங்கலி யோகமும் உண்டாகும் என்பது ஐதீகம்.
எந்தப் பெண் தனது சகோதரருக்கு எம துவிதியை நாளில் விருந்து அளித்து உபசரித்து சந்தோஷப்பட செய்கின்றாளோ, அந்த பெண் கணவனை இழக்கும் தன்மையை ஒருபோதும் அடைய மாட்டாள் என்று கூறுகிறது பிரம்மாண்ட புராணம்.
இந்த ஆண்டுக்கான எம துவிதியை இன்று (3.11.2024) கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் ஆண்கள், தனது உடன்பிறந்த சகோதரியின் வீட்டில் உணவருந்தி, சகோதரிக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து மகிழ்விக்கலாம். பெண்கள் தனது சகோதரனை வீட்டுக்கு அழைத்து விருந்து அளித்து உபசரிக்க வேண்டும். உடன்பிறந்த சகோதரி இல்லாதவர்கள் சித்தப்பா மகள், பெரியப்பா மகள், சித்தி மகள், பெரியம்மா மகள் மற்றும் யாரை சகோதரியாக நினைக்கிறார்களோ அவர்களின் வீடுகளில் உணவருந்தி ஆசீர்வாதம் செய்யலாம்.
இவ்வாறு மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்வதால் பரஸ்பரம் அன்பு வளரும். இருவருக்கும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், உடல் வலிமை, செல்வம் போன்ற நன்மைகள் உண்டாகும். எந்த ஒரு உபவாசமோ, பூஜையோ, இல்லாமல் சுலபமாக செய்யப்படும் இந்த எம துவிதியை விரதத்தை அனைவரும் கடைப்பிடிக்கலாம்.
உடன் பிறந்தவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ எமதர்மனை பிரார்த்தனை செய்வதும், சிவன் கோவிலில் உடன்பிறந்தவர்களின் நட்சத்திரம் கூறி அர்ச்சனை செய்வதும் நன்று.