இன்று தேய்பிறை பஞ்சமி.. வாராகியை வழிபட்டு வாழ்வில் ஏற்றம் பெறுங்கள்..!
|வாராகியை வாசனைப் பூக்களால், குறிப்பாக சிவப்பு நிற பூக்களைக் கொண்டு பூஜிப்பது விசேஷம்.
சப்த கன்னியர்களில் முக்கியமானவளான வாராகி அம்மன், தேய்பிறை பஞ்சமி திதியில் அவதரித்தார். எனவே, பஞ்சமி தினத்தன்று வாராகி அம்மனை வழிபாடு செய்வது, சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும் என்பது ஐதீகம்.
அவ்வகையில் கார்த்திகை மாதம் தேய்பிறை பஞ்சமி தினமான இன்று (20.11.2024) வாராகி அம்மனை வழிபட உகந்த நாளாகும். கோவில்களில் வாராகி அம்மனுக்கு சிறப்பு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு பஞ்சமி அன்றும் வாராகி அம்மனை வழிபட்டு வருவது வாழ்வில் பலவிதமான ஏற்றங்களை கொடுக்கும் என்பது ஐதீகம். வாராகி அம்மன் எதிரிகளிடம் இருந்து நம்மை காத்து அருள்புரிய கூடிய தெய்வம். வாராகியை வழிபடுவதால் மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும்.
வீட்டில் வாராகி யந்திரம் வைத்திருப்பவர்கள், விக்கிரகம் வைத்திருப்பவர்கள், பால், தேன், இளநீர், பஞ்சாமிர்தங்களால் தேவிக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சிப்பது நன்மையளிக்கும். வாராகியை வழிபடுபவர்களுக்கு, மந்திர சித்தி, வாக்கு சித்தி கிடைக்கும். இந்த தேவியை பூஜிப்பவர்களுக்கு, செய்வினை அண்டாது என்பது நம்பிக்கை.
வாராகியை வாசனைப் பூக்களால், குறிப்பாக சிவப்பு நிற பூக்களைக் கொண்டு பூஜிப்பது விசேஷம். கருப்பு உளுந்தில் செய்த வடையும், மிளகு சேர்த்த தயிர் சாதமும். சர்க்கரைவள்ளிக் கிழங்கும், சுக்கு சேர்த்த பானகமும், வாராகி தேவிக்கு சிறப்புக்குரிய நைவேத்தியங்கள்.