திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 31-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து
|திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 31-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தருகிறார்கள். திருப்பதியில் ஆர்ஜித சேவை, ரூ 300 விரைவு தரிசனம், இலவச தரிசனம், திவ்ய தரிசனம் எனப்படும் நடைபாதை தரிசனம் ஆகியவை உள்ளன. இதில் நடைபாதை தரிசனத்தில் அலிபிரி மலை பாதை வழியாகவும் ஸ்ரீவாரி மெட்டு பாதை வழியாகவும் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்கள்.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 31-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 31-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது. இதனால், அன்று 'செல்ப் புரோட்டோகால்' தரிசனத்தைத் தவிர வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்காக 30-ந்தேதி பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்களும் நிராகரிக்கப்படுகின்றன. இதைப் பக்தர்கள் கவனித்து தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.