< Back
ஆன்மிகம்
திருப்பதியில் மார்ச் மாதத்துக்கான தரிசன டிக்கெட், தங்குமிட ஒதுக்கீடு தேதிகள் மாற்றம்
ஆன்மிகம்

திருப்பதியில் மார்ச் மாதத்துக்கான தரிசன டிக்கெட், தங்குமிட ஒதுக்கீடு தேதிகள் மாற்றம்

தினத்தந்தி
|
22 Dec 2024 1:47 PM IST

மார்ச் மாதத்துக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 26-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 10-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை வைகுண்ட ஏகாதசி துவார தரிசனம் நடைபெற உள்ளது. இந்த 10 நாட்களும் பக்தர்கள் துவார தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதால், வழக்கமான மாதாந்திர தரிசனத்திற்கான ஸ்ரீவாணி டிக்கெட் மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட் ஒதுக்கீட்டு தேதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அடுத்த மாதம் (ஜனவரி) 10 முதல் 19-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனத்துக்காக ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் 23-ம் தேதி (நாளை) காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

மேலும் 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனத்துக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 24-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கான ஸ்ரீவாணி தரிசனம், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் 25-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். மார்ச் மாதத்துக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 26-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். திருப்பதி மற்றும் திருமலையில் உள்ள தங்கும் விடுதிகளில் உள்ள அறைகள் ஒதுக்கீடு அன்றைய தினம் மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.

இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு, பக்தர்கள் தங்களுக்கான தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகளை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in -ல் மட்டுமே முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்