திருச்சானூரில் பிரம்மோற்சவம்: ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயார்
|அலங்கரிக்கப்பட்ட ஹனுமந்த வாகனத்தில் பட்டாபி ராமர் அலங்காரத்தில் எழுந்தருளிய தாயார், மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்சானூர்:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையிலும் இரவிலும் தாயார் வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சின்ன சேஷ வாகனம், பெரிய சேஷ வாகனம், ஹம்ச வாகனம், முத்தையாபு பாண்டிரி வாகனம் மற்றும் சிம்ம வாகன சேவை, கல்ப விருட்ச வாகன சேவையைத் தொடர்ந்து நேற்று இரவு ஹனுமந்த சேவை நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட ஹனுமந்த வாகனத்தில் பட்டாபி ராமர் அலங்காரத்தில் எழுந்தருளிய தாயார், மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் திருமலை பெரிய ஜீயர், சின்ன ஜீயர், திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ், இணை செயல் அலுவலர் வீரபிரம்மம், துணை செயல் அலுவலர் கோவிந்தராஜன், அர்ச்சகர்கள் பாபு ஸ்வாமி மற்றும் பலர் கலந்துகொண்டு தாயாரை தரிசனம் செய்தனர்.
வாகன வீதியுலாவுக்கு முன்னால், வாத்திய குழுவினரின் இசை மற்றும் பல்வேறு நடன கலைஞர்கள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தர்கள் பலர் சாமி வேடமிட்டு ஊர்வலத்தில் பங்கேற்றனர். நவ துர்க்கை, ஸ்ரீ கோதை கல்யாணம், ஸ்ரீ கிருஷ்ண லீலா, ஸ்ரீ ஆஞ்சநேயம், அஷ்ட லக்ஷ்மி வைபவம் என பல்வேறு வேடமிட்டு கலைஞர்கள் வலம் வந்தது பக்தர்களை கவர்ந்தது.
இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை பல்லக்கு வாகன சேவை நடைபெற்றது.