பிரம்மோற்சவ விழா 5-வது நாள்: தங்க யானை வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதிஉலா
|யானை வாகன சேவைக்கு முன்னால் நாட்டுப்புற நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
திருச்சானூர்:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையிலும் இரவிலும் தாயார் வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சின்ன சேஷ வாகனம், பெரிய சேஷ வாகனம், ஹம்ச வாகனம், முத்தையாபு பாண்டிரி வாகனம் மற்றும் சிம்ம வாகன சேவை, கல்ப விருட்ச வாகன சேவை, ஹனுமந்த வாகன சேவையைத் தொடர்ந்து விழாவின் 5-ம் நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணிவரை பல்லக்கு சேவை நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் 'மோகினி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பல்லக்கு வாகன சேவைக்கு முன்னால் பல்வேறு கலைஞர்களின் தனித்துவமான நாட்டுப்புற கலை நடனங்கள் பக்தர்களை கவரும் வகையில் இருந்தன. அதில் கோலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் மற்றும் கீலு குர்ராலு, கொம்மு கோயா, கோண்டு, கோலாட்டம், ஒ.டி.சி. நடனம் ஆகியவை அடங்கும். ஆக மொத்தம் 12 குழுக்களை சேர்ந்த 250 கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கண்கவர் நிகழ்ச்சிகளால் பக்தர்களை மகிழ்வித்தனர்.
அதைத்தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் காலை 11.30 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயாருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 3.30 மணியில் இருந்து 5 மணி வரை வசந்தோற்சவம் நடந்தது. கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 'சிகர' நிகழ்ச்சியான தங்க யானை வாகன வீதிஉலா இரவு 7 மணியில் இருந்து 10 மணி வரை நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் தங்கம், வைர நகைகள், திருமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட லட்சுமி காசு மாலை ஆரம் உள்ளிட்ட ஆபரணங்களை அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார்.
யானை வாகன சேவைக்கு முன்னால் பல்வேறு கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். பஞ்சாரா, கீழுர்ரலு, மாதுரி போன்ற நாட்டுப்புற நடனங்கள் பக்தர்களுக்கு உற்சாகத்தை அளித்தன. பெண்களின் கதக் நடனம், மணிப்புரி நடனம், கேரள செண்டை மேளம், எஸ்.வி. பாலமந்திரம் மாணவர்களின் கோலாட்டம், எஸ்.வி. இசை மற்றும் நடனக் கல்லூரி மாணவர்களின் அஷ்டலட்சுமி வைபவம் போன்ற பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றன.
விழாவின் 6-வது நாளான இன்று காலை சர்வ பூபால வாகன வீதிஉலா நடைபெற்றது. மாலையில் தங்கத் தேரோட்டம், இரவு கருட வாகன சேவை நடக்கிறது.