மோட்சம் அருளும் முல்லைவனநாதர்
|திருமுல்லைவாசல் ஆலயத்தில் சிவாலயங்களுக்கு உரிய அனைத்து வார, பட்ச, மாதாந்திர பூஜைகளும் நடைபெறுகின்றன.
சீர்காழி அருகில் உள்ள திருமுல்லைவாசலில் (தென்திருமுல்லைவாயில்) அமைந்துள்ளது முல்லைவன நாதர் கோவில். தேவாரப் பாடல் பெற்ற 276 தலங்களில் தென்திருமுல்லைவாயில் திருத்தலமானது, சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 7-வது தலமாகும். இத்தல இறைவன் 'முல்லைவனநாதர்', இறைவி 'அணிகொண்ட கோதையம்மை' என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆலயத்தின் தல விருட்சமாக முல்லைக்கொடி உள்ளது. இங்கே பிரம்ம தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.
சிவாலயங்களுக்கு உரிய அனைத்து வார, பட்ச, மாதாந்திர பூஜைகளும் இங்கு நடைபெறுகின்றன. அதோடு சித்திரை புத்தாண்டு, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, மார்கழி நடராஜர் வழிபாடு, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நிகழ்வுகளும் விமரிசையாக நடக்கின்றன.
இரண்டு காலை பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்தில் சூரிய கிரகண நாள், அமாவாசை ஆகிய தினங்களில் முன்னோர்களை நினைத்து மோட்ச தீபம் ஏற்றி பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்து இறைவனை வழிபட்டால், செல்வச் செழிப்பும், நிம்மதியும் வந்துசேரும். அதோடு முக்தியும் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம்.