< Back
ஆன்மிகம்
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: தங்க சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்
ஆன்மிகம்

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: தங்க சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்

தினத்தந்தி
|
3 Nov 2024 2:52 PM IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. 2-ம் திருநாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து யாக சாலையில் உள்ள சுவாமி, அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. அப்போது அங்கு ஆயிரக்கணக்கில் திரண்டு இருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாடுதுறை ஆதினம் கந்த சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளிகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. இரவு சுவாமி, வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

6-ம் திருநாள் 7-ந் தேதி(வியாழக்கிழமை) மாலை 4.30 மணி அளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. சூரசம்ஹாரமான பின்பு சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் கிரிப்பிரகார உலா வந்து கோவில் சேர்கிறார்கள்.

7-ம் திருநாளான 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்