< Back
ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா
ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா

தினத்தந்தி
|
30 Jan 2025 6:40 AM IST

தை கார்த்திகையொட்டி நகரின் முக்கிய ரத வீதியில் தேரோட்டம் நடக்கிறது.

மதுரை,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த திருவிழா வருகின்ற 7ந் தேதி வரை நடக்கிறது. முதல்நாளான நேற்று காலை 6.15 மணியளவில் உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் அருள் பார்வையில் தங்கமுலாம் பூசப்பட்ட கம்பத்தில் காலை 6.45 மணியளவில் கொடி ஏற்றப்பட்டது.

முன்னதாக பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மேளதாளங்கள் முழங்க சுவாமிக்கும், கம்பத்திற்கும் தீப, தூப, ஆராதனை நடைபெற்றது. இதையொட்டி அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷங்கள் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி தினமும் காலையிலும், இரவிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாளுடன் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 6ந் தேதி காலையில் ஜி.எஸ்.டி. ரோட்டில் உ ள்ள தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டுதள்ளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தை கார்த்திகையொட்டி நகரின் முக்கிய ரத வீதியில் தேரோட்டம் நடக்கிறது. 16 கால் மண்டபத்தில் இருந்து நகரின் நான்கு முக்கிய வீதிகளில் தேர் வலம் வருகிறது. சிகர நிகழ்ச்சியாக 7ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. அன்று காலையிலும், இரவிலுமாக சுவாமி, தெப்ப மிதவையில் எழுந்தருளி தெப்பக்குளத்தை வலம் வருதல் நடக்கிறது.

மேலும் செய்திகள்