< Back
ஆன்மிகம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவம்
ஆன்மிகம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவம்

தினத்தந்தி
|
17 Jan 2025 2:11 AM IST

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு ரூ.2 கோடி 80 லட்சத்தில் குளம் சீரமைக்கப்பட்டது.

சிதம்பரம்,

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 9-வது நாள் தேரோட்டமும், 10-வது நாள் ஆருத்ரா தரிசன விழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கனகசபை நகரில் உள்ள ஞானபிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி நடராஜ பெருமானுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தெப்ப உற்சவம் நடந்தது. இதில் சந்திரசேகரர் சாமி தெப்பத்தில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆக்கிரமிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாத காரணத்தால் கடந்த பல ஆண்டுகளாக ஞானபிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு ரூ.2 கோடி 80 லட்சத்தில் குளம் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து 22 ஆண்டுகளுக்கு பிறகு ஞானபிரகாசம் குளத்தில் நடராஜர் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்